இந்தியா vs பாகிஸ்தான் : அதிக வெற்றிகளை பெற்ற அணி எது?

India vs Pakistan: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா அபாரமாக விளையாடி பாகிஸ்தான் அணியை மீண்டும் தோற்கடித்தது. இதே தொடரில் லீக் சுற்றுப் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து தெரிவித்த கருத்து இப்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. பாகிஸ்தான் அணியை இந்திய அணிக்கு போட்டியாளர் என்றெல்லாம் சொல்லாதீர்கள் என சூப்பர் 4 சுற்றுக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

Add Zee News as a Preferred Source

சூர்யகுமார் யாதவ் பேட்டி

சூர்யகுமார் யாதவ், இந்தப் போட்டிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, ஒரு பாகிஸ்தான் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, அவர், “இரு அணிகள் 15 போட்டிகளில் விளையாடி, அதில் 8-7 என வெற்றி-தோல்வி கணக்கு இருந்தால், அது ஒரு போட்டி. ஆனால், இங்கே 15 போட்டிகளில் 12-3 அல்லது 13-1 என்று இருக்கும்போது, இதை ஒரு போட்டி என்று சொல்ல முடியாது. நாங்கள் அவர்களை விட சிறப்பாக விளையாடினோம்,” என்றார்.

இப்போட்டியில் இந்திய அணி உண்மையாகவே அபாரமாக விளையாடி, பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் பின்னணியில், இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததாக சூர்யகுமார் பாராட்டினார். குறிப்பாக, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் மற்றும் சுப்மன் கில், 9.5 ஓவர்களில் 105 ரன்கள் குவித்து, வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தனர்.

பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா என்ன சொன்னார்?

பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா, தங்கள் அணி வெற்றி பெற 15-20 ரன்கள் குறைவாக எடுத்ததாகக் கூறினார். “நாங்கள் இந்தத் தொடரில் இன்னும் ஒரு சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 10 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்திருந்தோம். அதன் பிறகு நாங்கள் எங்கள் ஆட்டத்தை இழந்தோம். ஆனாலும், 171 ரன்கள் ஒரு சவாலான ஸ்கோர் என்று நினைக்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார். இந்திய தொடக்க ஆட்டக்காரர்களை கட்டுப்படுத்த தங்கள் பந்துவீச்சாளர்களால் முடியவில்லை என்றும் அவர் ஒப்புக்கொண்டார். “நாங்கள் ஒரு சரியான ஆட்டத்தை விளையாட வேண்டும், பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட வேண்டும்,” என்று ஆகா கூறினார்.

எந்த அணி அதிக வெற்றிகளை பெற்றுள்ளது?

சூர்யகுமார் கூறியதுபோல, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை 15 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 12 போட்டிகளிலும், பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளையும் (டெஸ்ட், ஒருநாள், டி20) சேர்த்துப் பார்த்தால், இரு அணிகளும் இதுவரை 210 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் பாகிஸ்தான் 88 போட்டிகளிலும், இந்தியா 78 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 38 போட்டிகள் டிராவிலும், 6 போட்டிகள் முடிவில்லாமலும் முடிந்துள்ளன.

டெஸ்ட் போட்டிகள்: பாகிஸ்தான் 12 வெற்றிகள், இந்தியா 9 வெற்றிகள் (மொத்தம் 59 போட்டிகள்).

ஒருநாள் போட்டிகள்: பாகிஸ்தான் 73 வெற்றிகள், இந்தியா 58 வெற்றிகள் (மொத்தம் 136 போட்டிகள்).

டி20 போட்டிகள்: இந்தியா 12 வெற்றிகள், பாகிஸ்தான் 3 வெற்றிகள் (மொத்தம் 15 போட்டிகள்).

மொத்த போட்டிகளில் பாகிஸ்தான் அதிக வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், டி20 போட்டிகளில் இந்தியா அபாரமான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. 

About the Author


S.Karthikeyan

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.