துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சகிப்சதா பர்ஹான் 58 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 47 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில்லிடம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப் வம்பிழுத்தார். அதற்கு இருவரும் தக்க பதிலடி கொடுத்தனர். அத்துடன் இதனை பார்த்த இந்திய ரசிகர்களும் பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்த ஹாரிஸ் ரவூப்புக்கு எதிராக கோலி.. கோலி.. என கூச்சலிட்டு கலாய்த்தனர்.
அதாவது 2022-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி இந்தியாவுக்கு மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அப்போட்டியில் ஹாரிஸ் ரவூப் பந்தில் நேராக விராட் கோலி அடித்த சிக்சர் 21ஆம் நூற்றாண்டின் சிறந்த ஷாட் என்று ஐ.சி.சி. பாராட்டியது. அதனை சுட்டிக்காட்டி ரசிகர்கள் கலாய்த்தனர்.
அதற்கு ஹாரிஸ் ரவூப் 6 விரல்களைக் காட்டி ‘விமானம் விழுந்து நொறுங்குவது’ போன்ற சைகையை செய்தார். அதாவது காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதற்கு பதிலடியாக, “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி தாக்குதலை மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரே நாள் இரவில் மொத்தம் 9 தீவிரவாத முகாம்கள் இதில் அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது ஆறு இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பலமுறை கூறியது.
அந்த போலியான செய்தியை வைத்துக்கொண்டு ‘6 விமானங்கள் வீழ்த்தப்பட்டது மறந்து விட்டதா?’ என்ற வகையில் ஹாரிஸ் ரவூப் சைகை செய்தார். அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் கோலி.. கோலி.. என்று கூச்சலிட்டு அவருக்கு மீண்டும் பதிலடி கொடுத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.