வாஷிங்டன்,
அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டினருக்கு எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) அதிபர் டிரம்ப் உயர்த்தினார். ரூ.1.75 லட்சமாக இருந்த இந்த கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த கட்டணத்தை எச்-1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கும் அவரைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. இது எச்-1பி விசாவை அதிகளவில் பெறும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்து உள்ளது. இதற்கிடையே ஏற்கனவே எச்-1பி விசா வைத்திருப்போர் அல்லது புதுப்பிப்பவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது எனவும் இது ஒருமுறை மட்டுமே செலுத்தும் கட்டணம் எனவும் அமெரிக்க அரசு விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், எச்-1பி விசா கட்டண உயர்வில் இருந்து டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எச்-1பி விசா கட்டண உயர்வுக்கு பல்வேறு துறை நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்காவின் மருத்துவத்துறை கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்று கருத்துக்கள் எழுந்தன. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் டாக்டர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து மிகப்பெரிய மருத்துவ அமைப்புகள் கவலைகளை தெரிவித்தன. இதையடுத்து விசா கட்டண உயர்வில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் கூறும்போது, அதிபர் டிரம்ப்பின் விசா கட்டண உயர்வில் சில விலக்குகள் அளிக்கப்பட்ட உள்ளன. அதில் டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்குவர் என்று தெரிவித்தார். பாதிக்கும் என்ற கருத்துகள் எழுந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.