திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிரமருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அழிக்கல் கடப்புரம் பகுதியில் கடலில் மீன் பிடிக்க மீனவர்கள் படகில் சென்றனர். சக்கச்சன் பரக்கல் பகுதியை சேர்ந்த ரசாக் என்பவர் மீன் பிடிப்பதற்காக வலையை வீசினார்.
அப்போது வலையில் அதிக எடையில் ஏதோ ஒன்று சிக்கியது. உடனே அவர் வலையை வெளியே இழுத்து பார்த்த போது, 1½ அடி உயரமுள்ள 2 நாக சிலைகள் வலையில் சிக்கியது தெரியவந்தது. அதில் ஒரு சிலையில் 5 தலை நாக சிலையாகும். இதை கண்ட ரசாக் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரமோத் தலைமையிலான போலீசார் 2 சிலைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பித்தளையால் செய்யப்பட்ட சிலைகள் என்பது தெரியவந்தது.
சிலைகளை யாராவது திருடி வந்து கடலில் வீசினார்களா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.