எஸ்.ஜே.சூர்யா, அனிருத் உட்பட 90 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: பாடகர் ஜேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது

சென்னை: நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, நடிகை சாய்பல்லவி, இசையமைப்பாளர் அனிருத் உட்பட 90 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பாரதியார் விருது ந.முருகேச பாண்டியனுக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது கே.ஜே. ஜேசுதாஸுக்கும், பால சரஸ்வதி விருது முத்துகண்ணம்மாளுக்கும் வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன. அதேபோல, பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பால சரஸ்வதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும், சிறந்த கலை நிறுவனத்துக்கு கேடயமும், சிறந்த நாடகக் குழுவுக்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன.

கலைமாமணி விருது வழங்கக் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக் கலைகள் மற்றும் இதர கலைப் பிரிவுகள் என கலைப் பிரிவு வாரியாகப் பிரிக்கப்பட்டு, கலைமாமணி விருது பெறத் தகுதியுள்ள கலைஞர்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டன.

வல்லுநர் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட, தகுதியுள்ள கலைஞர்களின் பெயர்ப் பட்டியலுக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதில் இயற்றப்பட்ட தீர்மானம் மற்றும் பரிந்துரையை ஏற்று 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் பெறும் விருதாளர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. அந்த வகையில் தற்போது, 2021, 2022 மற்றும் 2023 ஆகிய 3 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2021-ம் ஆண்டில் நாடகப் பிரிவில் பூச்சி எஸ்.முருகன், திரைப்படப் பிரிவில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய்பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 30 பேருக்கு விருது வழங்கப்படுகிறது.

2022-ம் ஆண்டில் நடிகர் விக்ரம் பிரபு, நடிகை ஜெயா வி.சி.குகநாதன், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்ட 30 பேருக்கும், 2023-ல் நடிகர் கே.மணிகண்டன், குணச்சித்திர நடிகர் ஜார்ஜ் மரியான், இசையமைப்பாளர் அனிருத், பாடகி ஸ்வேதா மோகன், நடன இயக்குநர் சாண்டி
உள்ளிட்ட 30 பேருக்கும் விருது வழங் கப்படுகிறது. கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 பவுன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும்.

மேலும், அகில இந்திய அளவில் பாரதியார் விருது (இயல்) ந.முருகேசபாண்டியன், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது (இசை) பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் பால சரஸ்வதி விருது (நாட்டியம்) முத்துகண்ணம்மாள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் 3 பவுன் எடையிலான தங்கப் பதக்கம் வழங்கப்படும்.

அதேபோல, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில், சிறந்த கலை நிறுவனமாக சென்னை தமிழ் இசை சங்கம் (ராஜா அண்ணாமலை மன்றம்), சிறந்த நாடகக் குழுவாக மதுரை பாலமேடு கலைமாமணி எம்.ஆர்.முத்துசாமி நினைவு நாடக மன்றம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த விருதுகள் சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்த மாதம் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.