ஜெனீவா,
பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாணம் திரா பள்ளத்தாக்கில் உள்ள மாட்ரே தாரா கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் விமான படை நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேர் உயிர் இழந்தனர்.
இந்த விவகாரம் ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் 60-வது மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் எதிரொலித்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்தியாவின் நிரந்தர தூதர் ஹிதித தியாகி பாகிஸ்தான் நடவடிக்கைகளை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது:-
இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற மற்றும் ஆத்திர மூட்டும் குற்றச்சாட்டுகளை சுமத்த சர்வதேச மன்றத்தை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்துகிறது. எங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய விரும்புவதற்கு பதில் பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய பகுதியை விட்டு வெளியேறி வீழ்ச்சி அடைந்து வரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், ராணுவ ஆதிக்க அரசியலை சரி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கிறது. கைபர் பக்துன்கவாவில் தங்கள் சொந்த நாட்டு மக்களை குண்டு வீசி கொல்கிறது. பிரிவினையை விட ஒற்றுமை மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை ஊக்குவிக்க கூட்டு முயற்சி தேவை.
இவ்வாறு அவர் பேசினார்.