தஞ்சை- திருவையாறு செல்லும் பாதையில், தஞ்சையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கண்டியூர். வைணவ திவ்ய தேசங்களில் 7-வது தலம்.
இந்த அற்புதத்தலத்தில்தான் ஸ்ரீஹரசாப விமோசன பெருமாள் கோயில்கொண்டு அருள்கிறார். இந்த அற்புதத்தலத்தின் மகிமைகளையும் யாரெல்லாம் அவசியம் சென்று வழிபட வேண்டும் என்றும் காண்போம்.
ஒருவரின் வாழ்வில் மங்கலங்கள் நிறைந்து காணப்பட வேண்டுமென்றால் அவர் ஜாதகத்தில் குருபகவான் பலமாக இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல் குரு மறைந்தோ பாவகிரங்களுடன் சேர்க்கை பெற்றோ இருந்தால் உரிய பலன்களைப் பெற முடியாது. அதிலும் குறிப்பாக சனி பகவானுடன் இணைந்தோ அல்லது அவரின் பார்வை பெற்ற குரு அமைந்தால் அவர் தரும் காரகத்துவ நன்மைகள் அனைத்தும் தடைப்படும். இப்படிப்பட்ட ஜோதிட அமைப்பை பிரம்மஹத்தி தோஷம் என்பார்கள்.

முற்பிறவியில் கொலை செய்தல் அல்லது அதற்குத் துணைபோதல், குருவை அவமதித்தல், பசுவைத் துன்புறுத்துதல் போன்ற பாவங்களைச் செய்திருந்தால் இத்தகைய ஜாதக அமைப்பு உண்டாகும் என்பார்கள்.
இதனால் பிரம்மஹத்தி தோஷ ஜாதகக்காரர்கள் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இன்மை, தீராத நோய், மனநலப் பிரச்னைகள் ஆகிய தொந்தரவுகளை அனுபவிக்க நேரிடும்.
அப்படிப்பட்டவர்களுக்கு திருவிடைமருதூர் சிறந்த பரிகாரத் தலமாகச் சொல்வார்கள். அதேபோன்ற ஒரு சக்திவாய்ந்த பரிகாரத் தலமாக விளங்குவது திருக்கண்டியூர் ஹரபாபவிமோசன பெருமாள் கோயில்.
பரமேஸ்வரனின் தோஷம் நீங்கிய தலம்
தனக்கும் ஐந்துதலைகள் இருப்பதால் தானும் ஈசனே என்றும் தனக்கே அனைவரும் முதல்மரியாதை தரவேண்டும் என்று ஆணவம் கொண்டு பேசினார் பிரம்மன்.
அந்த ஆணவம் எல்லை மீறிப்போனபோது ஈசன் கோபாவேசம் கொண்டு பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிந்தார். இதனால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது.
அவரின் கையில் பிரம்மனின் கிள்ளி எறிந்த தலையின் மண்டை ஓடு திருவோடுபோல ஒட்டிக்கொண்டது. அத்துடன் பிட்சாடனராகத் திரிந்த ஈசனுக்கு, காசியில் அன்னபூரணி அன்னமிட்டு அந்த பிரம்ம கபாலத்தை நிரப்பிக் காத்தாள்.
அவளே அங்காளபரமேஸ்வரியாக ரூபம் கொண்டு அதை அழிக்கவும் செய்தாள். என்றாலும் பிரம்மனின் சிரசைக் கிள்ளியதால் உண்டான பிரம்ம ஹத்தி தோஷம் நீங்காமலேயே இருந்தது.
அப்போது ஈசன் திருக்கண்டியூர் திருத்தலத்துக்கு வந்தபோது இங்கிருந்த பெருமாளின் அருளை கண்குளிர ரசித்துப் பார்த்தார். அந்தக் கணத்தில் அவரைப் பற்றியிருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதாம். எனவே இந்தப் பெருமாளுக்கு ஹரசாப விமோசன பெருமாள் என்கிற திருநாமம் உண்டானது.

இந்தத் தலம் ஸ்ரீரங்கம், திருமயம், காஞ்சிபுரம் ஆகிய பழைமையான திவ்ய தேசங்களுக்கெல்லாம் முற்பட்டது என்று இந்தத் தலத்தைப் போற்றிப்பாடுகிறார் திருமங்கையாழ்வார்.
பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திருதந் துண்ணும்
உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிப்பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்குய்ய லாமே
– திருமங்கையாழ்வார்.
மேலும் இந்த பெருமாள், இரண்யகசிபுவி பேரனான மகாபலிக்குத் திருக்காட்சி அருளியவர் என்கிறார்கள்.
அப்படிப்பட்ட பெருமாளை ஒருமுறை தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். இங்கே, மூலவர் ஸ்ரீஹரசாபவிமோசனப் பெருமாள், கமலாக்ருதி விமானத்தின் கீழ், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். தாயார் ஸ்ரீகமலவல்லி. உற்ஸவர் ஸ்ரீகமலநாதன் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக எழுந்தருளியிருக்கிறார்.
பிரார்த்தனை சிறப்புகள்
அமாவாசை தினத்தன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்து, தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். பின்னர், ஏழை – எளியவர்களுக்குத் தங்களால் இயன்ற அளவு ஆடை தானம் செய்யவேண்டும். இதனால் சகல தோஷங்களும் நீங்கி, வாழ்க்கை வளம் பெறும் என்பது ஐதிகம். இங்கு, புரட்டாசி உற்ஸவம் வெகுவிசேஷம். புரட்டாசி மாதம், திருவோணம் நட்சத்திரத்தன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த உற்ஸவம், அனுதினமும் உற்ஸவரின் வீதியுலா, விசேஷ அபிஷேக- ஆராதனைகள் என களைகட்டுமாம். விழாவின் கடைசி நாளன்று, குடமுருட்டி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும். இந்த வைபவத்தில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார மக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்வார்களாம்.

பெருமாளின் கருவறைக்கு அருகிலேயே சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீசக்கரத்தாழ்வார் விசேஷமானவர்! இடக்காலை சற்றே முன்வைத்தபடி, பிரயோக நிலையில் உள்ளாராம் இந்தச் சக்கரத்தாழ்வார்.
ஆனி மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடுகளும், திருவுலாவும் ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு அமர்க்களப்படுகின்றன. அனுமனுக்கும் தனிச்சந்நிதி உண்டு. சனிக்கிழமைகளில் இவருக்கு வடைமாலை சாற்றி மனமுருகி வழிபட, வேண்டிய வரம் கிடைக்கும் என்கிறார்கள்.
பிள்ளை பாக்கியம் வேண்டுவோர், தம்பதி சமேதராக இங்கு வந்து பெருமாளைப் பிரார்த்திப்பதுடன், ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ணனை தாலாட்டிச் சீராட்டி வழிபட்டுச் செல்கின்றனர். இதனால், அவர்கள் வீட்டிலும் விரைவில் தாலாட்டுச் சத்தம் கேட்கும் என்பது நம்பிக்கை!
மூலவர் சந்நிதிக்கு வலப்புறம் கமலவல்லித் தாயார் சந்நிதியும், இடப்புறம் ஆண்டாள் சந்நிதியும் அமைந்துள்ளன. தாயாருக்கு வைகாசி மாதமும், ஆண்டாளுக்கு ஆடி மாதமும் உற்ஸவங்கள் நடைபெறுகின்றன. மேலும், ராப்பத்து- பகல்பத்து, மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, பரமபத வாசல் திறப்பு, ஐப்பசி- ஊஞ்சல் உற்ஸவம், நவராத்திரி, பங்குனி பிரம்மோற்ஸவம் ஆகியனவும் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.
தீர்த்தச் சிறப்புகளுடனும் திகழ்கிறது திருக்கண்டியூர். கபாலமோட்ச புஷ்கரணி, பத்ம தீர்த்தம், கபால தீர்த்தம், குடமுருட்டி நதி என்று நான்கு தீர்த்தங்கள் இந்தத் தலத்துக்கு.
இத்தலத்தை தரிசிக்க வருபவர்கள் அருகிலேயே இருக்கும் ஸ்ரீபிரம்மசிரகண்டீஸ்வரரையும் பிரம்மதேவனையும் சேர்த்து வழிபடுவது விசேஷம்.
மும்மூர்த்தியரையும் ஒருங்கே தரிசித்த திருப்தியையும் மனநிம்மதியையும் பெறலாம். இதன்மூலம் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கி வாழ்க்கை வளம்பெறுவதை அனுபவிக்க முடியும் என்கிறார்கள் பக்தர்கள்.