சாவோ பாவ்லோ,
பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ மாகாணத்தின் சொரோகாபா நகரில் ஜப்பான் நாட்டின் டொயோட்டா ரக கார் உற்பத்தி ஆலை உள்ளது. இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமையும், நேற்றும் புயல் பாதிப்புகளால் கனமழை பெய்து, பலத்த காற்றும் வீசியது.
இதனால், ஆலையை புயல் சூறையாடி விட்டு சென்றது. இதன் தொடர்ச்சியாக கார் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் போர்ட்டோ பெலிஜ் என்ற ஆலை உள்பட 2 ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஆலையின் கிடங்கு பகுதியில் உள்ள மேற்கூரை புயல் வீசியதில் பிய்த்து கொண்டு போய் விட்டது.
இதுபற்றிய புகைப்படங்களும் வெளிவந்து உள்ளன. புயல் பாதிப்பால் 30 தொழிலாளர்கள் காயமடைந்து உள்ளனர் என அதுபற்றிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
வருகிற அக்டோபர் 16-ந்தேதி யாரிஸ் கிராஸ் என்ற புது வகை கார் மாதிரியை உள்ளூரில் அறிமுகப்படுத்த டொயோட்டா நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த திட்டம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.