புதுடெல்லி,
இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பதவி முதல் முறையாக உருவாக்கப்பட்டு பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். அவர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள மலை பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதை தொடர்ந்து அந்தப் பதவி காலியாக இருந்த நிலையில் 9 மாதங்களுக்கும் மேலாக, அனில் சவுகான் பொறுப்பு முப்படை தலைமை தளபதியாக இருந்தார்.
பின்னர் அனில் சவுகான் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந்தேதி முதல் முப்படை தலைமை தளபதியாகவும், ராணுவ விவகார துறை செயலாளராகவும் பதவி ஏற்றுகொண்டார். இவருடைய பதவிக்காலம் வருகிற 30-ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது.இந்திய முப்படைகளின் தளபதிகளுக்கான வயது வரம்பு 62 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டுகள் பணிக்காலம், எது முந்தியதோ அதுவாகும். முப்படை தலைமை தளபதிக்கான வயது வரம்பு 65 ஆண்டுகள் ஆகும். இதற்கு நிலையான பதவிக்காலம் வரையறுக்கப்படவில்லை.
இந்நிலையில் மந்திரிசபையின் நியமன குழு நேற்றுகூடி அனில் சவுகானின் முப்படை தலைமை தளபதிக்கான பதவிக்காலத்தை நீடித்து ஒப்புதல் அளித்தது. அவர் ராணுவ விவகார துறையில் செயலாளராகவும் செயல்படுவார். அடுத்த ஆண்டு மே மாதம் 30-ந் தேதி வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை (8 மாதங்கள்) இந்த பதவிகளில் நீடிப்பார் என்று மந்திரிசபையின் நியமன குழு தெரிவித்துள்ளது.