துபாய்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 2-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குழு தலைவர் அகர்கர் இன்று துபாயில் செய்தியாளர்களை சந்தித்து அணி விவரத்தை வெளியிட்டுள்ளார். சுப்மன் கில் தலைமையிலான அந்த அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
காயம் காரணமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இடம்பெறவில்லை. துருவ் ஜூரெல் மற்றும் ஜெகதீசன் விக்கெட் கீப்பர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னணி வீரரான கருண் நாயர் அணியில் இடம்பெறவில்லை.
இந்திய அணி விவரம்: சுப்மன் கில் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், படிக்கல், துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் ரெட்டி, ஜெகதீசன், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.