துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் இன்று நடக்கும் 6-வது மற்றும் கடைசி லீக்கில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் மோதுகிறது.
இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இலங்கை வாய்ப்பை இழந்து விட்டது. அதனால் இது சம்பிரதாய மோதலாகவே இருக்கும். நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா, லீக் சுற்றில் 3 வெற்றிகளுடன் முதலிடத்தை பிடித்தது.
இலங்கை அணி சூப்பர்4 சுற்றில் வங்காளதேசத்திடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், பாகிஸ்தானிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவியது. வெற்றிப்பயணத்தை தொடர இந்தியாவும், போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்ய இலங்கையும் முயற்சிக்கும். அதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 22-ல் இந்தியாவும், 9-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார் அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.