“தமிழக மக்கள் விரும்புவது ஆட்சி மாற்றத்தையே!” – ஜி.கே.வாசன் கருத்து

திருநெல்வேலி: “தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான போட்டி முன்கூட்டியே தொடங்கிவிட்டது. தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மனநிலையில் உள்ளனர்” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி அருகே உள்ள தேவர் குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: ”தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பாலியல் வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். போதைப் பொருள் புழக்கம் காரணமாக பல்வேறு இடர்கள் ஏற்படுகின்றன. இவற்றுக்கு தீர்வு காண முடியாத அரசாக திமுக அரசு உள்ளது.

திமுக ஆட்சியால் மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது. வாக்குறுதிகள் கொடுத்து மீண்டும் ஏமாற்றி விடலாம் என்று திமுக திட்டமிடுகிறது. அது ஒருபோதும் நடக்காது. ஆட்சி மாற்றத்தை விரும்பும் யார் வேண்டுமானாலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம். ஒத்த கருத்துடைய பலர் எங்களுடன் இணைவார்கள்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான போட்டி முன்கூட்டியே தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் அவரவர் தொண்டர்களின் மனநிலைக்கு ஏற்ப வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றன. நடிகர் விஜய்யின் பிரசாரமும் அதுபோன்றதுதான். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்ற நினைக்கும் திமுகவின் திட்டத்தை அடித்தளத்திலேயே தடுக்கும் பணியை தேசிய ஜனநாயக கூட்டணி சிறப்பாக செய்து வருகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. மாநிலம் முழுவதும் கட்சி ரீதியாக 130 மாவட்டங்கள் உள்ளன. அதை 4 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் 8 நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். மக்கள் பிரச்சினைகளுக்காக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறோம்.

போக்குவரத்து தொழிலாளர்கள், தூய்மை பணியாளர் பிரச்சினை போன்றவற்றை திமுக அரசு சரியாக கையாளாமல் வஞ்சித்துள்ளது. மாணவர்கள் மத்தியில் பாகுபாடுகள் அதிகரித்து திருநெல்வேலியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. எத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு தனக்கான சில கோட்பாடுகளை மிகவும் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும்.

குடிமராமத்து உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பிரச்சினைகளும் அதிகமாகியுள்ளன. திருநெல்வேலியில் பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. அதனை வேகப்படுத்த வேண்டும். ஊத்துமலை அருகே ரெட்டை குளத்தையும் அதன் நீர்வரத்து ஓடையையும் தூர்வார வேண்டும்” என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.