ரியோ டி ஜெனிரோ,
பிரேசில் நாட்டில் உள்ள சில பெண்கள் சிறைகளில், கைதிகளின் தன்னம்பிக்கையை மேம்படுத்தவும், சமூக உணர்வை ஊக்குவிக்கவும், வருடாந்திர அழகிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டியின்போது பெண் சிறைக் கைதிகள் தங்கள் வழக்கமான சிறை ஆடைகளை விடுத்து, அலங்கார ஆடைகளை அணிகின்றனர்.
அதோடு சிகை அலங்காரம், ஒப்பனைகள் செய்து மாடல் அழகிகளைப் போல் மேடைகள் அணிவகுத்து ஒய்யாரமாக நடைபோடுகின்றனர். அதே சமயம், இந்த இந்த அழகிப் போட்டி மூலம் சிறைக் கைதிகள் தங்கள் குடும்பத்தினரை சந்தித்து அவரக்ளுடன் நேரம் செலவிடுவதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது.
இந்த நிலையில், ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள பெண்கள் சிறைச்சாலை அழகிப்போட்டி நடைபெற்றது. அங்குள்ள கைதிகளில், நன்னடத்தை அடிப்படையில் 10 பெண் கைதிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு போட்டிக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. விழாவின்போது கண்கவர் ஆடைகளுடன் பெண் கைதிகள் மேடையில் வலம் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அவர்களின் உடை அலங்காரம் மற்றும் அணுகுமுறையின் அடிப்படையில் நடுவர்கள் மதிப்பெண்களை வழங்கினர். இறுதியாக ஜாய் சோரஸ் என்ற பெண் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மகுடம் அணிவித்து நடுவர்கள் கவுரவித்தனர். அப்போது பார்வையாளர்களும், சக கைதிகளும் உற்சாகமாக கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.