மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு

புதுடெல்லி,

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், பல்வேறு நாடுகள் மீது சரமாரியாக இறக்குமதி வரி விதிப்பை அறிவித்து வருகிறார். இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை அவர் அறிவித்தார்.

குறிப்பாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை காரணமாக காட்டி, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான வரியை 50 சதவீதமாக டிரம்ப் உயர்த்தியுள்ளார். இதனால், இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக டொனால்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதேவேளை, மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் அமைத்திருந்தால் அந்த நிறுவனங்களுக்கு இந்த வரி பொருந்தாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், சமையலறை உபகரணங்கள், பாத்ரூம் உபகரணங்கள் மீது 30 சதவீத இறக்குமதி வரியும் பர்னிச்சர் பொருட்கள் மீது 25 சதவீத இறக்குமதியும் விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. டிரம்ப்பின் இந்த அறிவிப்பால் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மருந்து பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 100 சதவீதம் வரி விதித்த‌ விவகாரத்தில் சூழ்நிலைகளை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக இந்திய அரசு விளக்கமளித்துள்ளது. மேலும் டிரம்ப்பின் இந்த வரி விதிப்பு நடவடிக்கையால் மருந்து கம்பெனிகளுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.