ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் கிராம மேம்பாட்டுத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் சோனாக்ஷி யாதவ். இவரிடம் பிரதான் மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கிட்டிற்கான ஒப்புதல் பெறுவதற்காக பயனாளர் ஒருவர் சென்றுள்ளார்.
அந்த பயனாளரிடம், நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றால் ரூ.2,500 லஞ்சம் தர வேண்டும் என்று சோனாக்ஷி கேட்டுள்ளார். இதன்படி அந்த பயனாளர் முதலில் ரூ.1,000 லஞ்சமாக கொடுத்துள்ளார். ஆனால் மீதமுள்ள ரூ.1,500 லஞ்ச பணத்தையும் தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஒப்புதல் வழங்க முடியாது என்றும் சோனாக்ஷி கூறியுள்ளார்.
இது குறித்து அந்த நபர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் களத்தில் இறங்கிய அதிகாரிகள், சோனாக்ஷியை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதன்படி, புகார் அளித்த நபர் சோனாக்ஷியிடம் ரூ.1,000 லஞ்ச பணத்தை கொடுக்க சென்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோனாக்ஷியை சரியான நேரத்தில் பிடித்து, ஆதாரத்துடன் சிக்க வைத்தனர்.
இதையடுத்து, லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி சோனாக்ஷி மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அஜ்மீர் நகரில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர நடவடிக்கைகளில் இது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி என்றும், ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தருவோம் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.