தமிழகத்தை ‘கடன்கார மாநிலம்’ ஆக படுகுழியில் தள்ளிய திமுக அரசு: தரவுகளை சுட்டிக்காட்டி இபிஎஸ் சாடல்

சென்னை: ‘திமுகவின் தோல்வி மாடல் அரசு ரூ.4.5 லட்சம் கோடி கடன் வாங்கி தமிழகத்தின் நிதி நிலைமையை படுபாதாளத்தில் தள்ளிவிட்டது’ என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் கடன் சுமையை வரலாறு காணாத அளவுக்கு ஏற்றிவிட்டு, இந்திய அளவில் கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிவிட்டு, வெற்று விளம்பரங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களை நான்கரை ஆண்டுகளாக ஏமாற்றி வரும் விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு, ஆகஸ்ட் 2025-க்கான மாநில கணக்கு தணிக்கை அறிக்கையின்படி, ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் நிதிச் சுமையில் தள்ளாடி வருவதை தெளிவாகக் காண முடிகிறது.

2021-ல் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், கடன் சுமையை குறைக்கவும் ஆலோசனை வழங்க இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழு அளித்த பரிந்துரை என்ன? அதனை இந்த அரசு செயல்படுத்தியதா என்றே தெரியவில்லை. மேலும், மேலும் பலவிதங்களிலும் கடன் வாங்கி அரசின் வருவாயை பெருக்கும் யோசனையைதான் இந்த நிபுணர் குழு அளித்ததோ என்ற சந்தேகம் எழுகிறது.

மாநில கணக்கு தணிக்கை அறிக்கையின் (CAG) ஆகஸ்ட் 2025 புள்ளி விவரப்படி, வருவாய் தலைப்பில் சென்ற ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வருவாய் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் கட்டுப்பாடு இல்லாமல் அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்ய, திமுக அரசு மேலும் மேலும் கடன் வாங்கி, தமிழ்நாட்டை ‘கடன்கார மாநிலம்’ என்ற படுகுழியில் தள்ளியுள்ளது.

வாங்கும் கடனில் பெரும்பகுதி, வருவாய் செலவினத்துக்கே செலவு செய்யப்படுகிறது என்று ஏற்கெனவே CAG தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள நிலையில், நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 37,082 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ள நிலையில், மூலதனச் செலவாக வெறும் ரூ.9,899 கோடி மட்டும் செலவிட்டுள்ள நிலையில், மீதமுள்ள ரூ.27 ஆயிரம் கோடி வருவாய் செலவினத்திற்கே செலவிட்டுள்ளது.

2025-26-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில், வருவாய் பற்றாக்குறை இலக்கு 41,635 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கடந்த ஐந்து மாதங்களிலேயே வருவாய் பற்றாக்குறை 25,686 கோடி ரூபாயை எட்டிவிட்டது. மீதமுள்ள 7 மாதங்களில் மொத்த வருவாய் பற்றாக்குறை சுமார் 60 ஆயிரம் கோடியை தாண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2025-26-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மூலதனச் செலவுக்காக 57,271 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று இலக்கு நிர்ணயித்த நிலையில், இதுவரை மூலதனச் செலவாக வெறும் 9,899 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள மாதங்களில், மழைக்காலம், அதைத் தொடர்ந்து தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மூலதனச் செலவிற்கு நிர்ணயிக்கப்பட்ட மீதமுள்ள தொகையான சுமார் ரூ.47,000 கோடி இலக்கை இந்த நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு எப்படி எட்டும் என்பது ஒரு கேள்விக்குறியே.

ஏற்கெனவே சொத்து வரி, குடிநீர் (ம) கழிவு நீர் கட்டணங்கள், பதிவுக் கட்டணம், தொழில் வரி, மின் கட்டணம், நில வழிகாட்டு மதிப்பீடு என்று அரசின் அனைத்து கட்டணங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டு, 4 ஆண்டுகளில் அரசின் வருவாய் பல மடங்கு உயர்ந்த நிலையில், கடன் வாங்குவதிலும் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது நிர்வாகத் திறமையற்ற விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஃபெயிலியர் அரசு.

இந்நிலையில், கடன் வாங்கி கார் பந்தயம் போன்ற ஆடம்பரச் செலவுகள், நினைவு மண்டபம் போன்ற வெட்டிச் செலவுகள், அரசு நிதியில் மட்டுமல்லாமல், ஊராட்சி நிதியிலும் வீண் விளம்பரச் செலவுகள் செய்து தமிழ்நாட்டை இந்த பொம்மை முதல்வர் கடனில் மூழ்கடித்துள்ளார்.

ஏற்கெனவே தமிழ்நாடு அரசு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மூலம் வங்கிகளில் வாங்கிய கடனின் மொத்த அளவு சுமார் ரூ.23 ஆயிரம் கோடிக்கு மேல் அதிகரித்துவிட்ட நிலையில், இந்த ஆண்டு நெல் கொள்முதல் செய்ய தேவைப்படும் 10 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசின் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் (NCDC), மூலம் வாங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஆண்டுக்கு சுமார் ரூ. 150 கோடி டர்ன் ஓவர் செய்யும் ‘டான்பெட்’ நிறுவனம் மூலம் மத்திய அரசின் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் கோடியை வாங்க முயற்சிக்கிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு அரசு, கடன் மட்டுமின்றி, போக்குவரத்துக் கழகம், மின்சார வாரியம், தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் என்று தமிழ் நாட்டின் அனைத்து வாரியங்கள், கழகங்கள் மூலமும் 4 ஆண்டுகளில் அதிக அளவு கடனை வாங்கி தமிழகத்தை திவாலாக்கும் கடைசி படியில் நிற்க வைத்ததுதான் இந்த விடியா திமுக ஃபெயிலியர் மாடல் முதல்வர் ஸ்டாலினின் சாதனை. நிர்வாகத் திறனற்ற பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

நிதி மேலாண்மை என்றால் என்னவென்றே தெரியாத பொம்மை முதல்வர் ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற ஆட்சியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது துவக்கப்பட்டு, 80 சதவீதம் வரை நிறைவேற்றப்பட்ட திட்டங்களை, வேண்டும் என்றே மூன்றாண்டுகளுக்குமேல் இழுத்தடித்து, தாங்கள் கொண்டு வந்தது போல் ஸ்டிக்கர் ஒட்டி திறந்த மோசடி நாடகம்தான் நடந்ததே தவிர, இந்த அரசு மக்களுக்காக எந்தவொரு நல்ல திட்டங்களையும் கொண்டு வரவில்லை.

மக்களின் வரிப் பணத்தோடு, இதுவரை 4.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்து, வீண் ஜம்பம் அடிக்கும் வேலையில்தான் ஈடுபட்டுள்ளது. இது பொம்மை முதல்வர் ஸ்டாலினின் 53 மாத கால ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துள்ளதோடு, நிதி மேலாண்மையிலும் தனது தோல்வியை பறைசாற்றியுள்ளது.

செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவிற்கும், வரி செலுத்தும் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் ஆட்சியாளர்கள் என்பதை நினைவில்கொண்டு உடனடியாக கடன் வாங்குவதை குறைத்து, சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழக அரசு மற்றும் தமிழக அரசின் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களின் நிதி நிலை பற்றியும், வாங்கியுள்ள கடன் தொகை எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என்பது பற்றியும் விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் பொம்மை முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.