நியூயார்க்: பாகிஸ்தானில் சிவில் தலைமையும் ராணுவத் தலைமையும் இணைந்த கலப்பின மாடல் ஆட்சி இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புக்கொண்டுள்ளார்.
நியூயார்க்கில் பிரிட்டிஷ் – அமெரிக்கன் பத்திரிகையாளர் மேஹ்தி ஹசனுக்கு, கவாஜா ஆசிப் பேட்டி அளித்தார். “பாகிஸ்தானில் சிவில் தலைமையும் ராணுவத் தலைமையும் இணைந்து நாட்டை வழிநடத்துகின்றன. ஒரு வகையில் இது ஒரு கலப்பின மாடல் என குறிப்பிடலாம்” என கவாஜா ஆசிப் ஏற்கனவே தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டி, மேஹ்தி ஹசன் கேள்வி எழுப்பினார்.
“பாகிஸ்தானில் விசித்திரமான அமைப்பு உள்ளது. நீங்கள் அதை ஒரு கலப்பின மாடல் என அழைத்தீர்கள். இரு தரப்பும் திறம்பட அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதாகக் கூறி இருக்கிறீர்கள். ஆனால், பாகிஸ்தானில் ராணுவத் தலைவர்தான் (அனைத்துக்கும்) பொறுப்பு இல்லையா? பெரும்பாலான நாடுகளில் ராணுவத் தளபதி, ராணுவ அமைச்சருக்கு பதிலளிப்பார். ஆனால், உங்கள் நாட்டில் நீங்கள்தான் உங்கள் ராணுவத் தளபதிக்கு பதிலளிக்க வேண்டும் இல்லையா? உங்களை விட அசிம் முனிர் சக்திவாய்ந்த நபராக இருக்கிறாரே?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த கவாஜா ஆசிப், “அது அப்படி அல்ல. அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவன் நான். நான் ஒரு அரசியல் பணியாளன்” என தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர் மேஹ்தி ஹசன், “அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் இங்கே போருக்கான அமைச்சருக்குத்தான் அதிகாரம் அதிகம். அவர் நினைத்தால், ராணுவத் தளபதிகளை பணிநீக்கம் செய்யலாம். ஆனால், பாகிஸ்தானுக்கு இது பொருந்தாது இல்லையா?” என கேட்டார்.
அதற்கு கவாஜா ஆசிப், “அமெரிக்காவின் ஆட்சிமுறை வேறுமாதிரியானது. இது டீப் ஸ்டேட்(deep state) என அழைக்கப்படுகிறது” என பதிலளித்தார்.
“உங்கள் நாட்டில் டீப் ஸ்டேட்தான் ஆட்சிப்பொறுப்பில் இருக்கிறது. அதுதான் குற்றச்சாட்டு” என மேஹ்தி ஹசன் குறிப்பிட்டார்.
அதற்கு, “கடந்த கால அரசியல் தலைமைதான் அதற்குக் காரணம். அதோடு, எங்கள் ராணுவ ஆட்சியாளர்களாலும் அது அதிகமாகத் தெரிகிறது” என கவாஜா ஆசிப் கூறினார்.
உண்மையில் பாகிஸ்தானின் அதிகாரம் எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘கலப்பு அதிகாரம்’ என கவாஜா பதில் அளித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் அழைப்பின் பேரில், அந்நாட்டுக்குச் சென்று அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியவர் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர். அப்போது, அசிம் முனிருக்கு ட்ரம்ப் இரவு உணவு விருந்தளித்தார். நேற்று முன்தினம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தபோது அசிம் முனீரும் உடன் சென்றிருந்தார். இது சர்வதேச அளவில், பாகிஸ்தானின் சிவில் தலைமைக்கு இருக்கும் அதிகாரம் குறித்த சந்தேகத்தை எழுப்பியது. இந்நிலையில், பாகிஸ்தானில் சிவில் தலைமை மற்றும் ராணுவத் தலைமை இரண்டின் கலப்பு ஆட்சி இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சரே கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.