"பாகிஸ்தான் ராணுவம்தான் இந்தியாவிடம் கெஞ்சியது" – பாக். பிரதமருக்கு இந்தியா கொடுத்த பதிலடி!

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபையில் 80-வது அமர்வு பொதுவிவாதம் நடந்து வருகிறது.

இதில் மே 2025 மோதல் என இந்தியாவின் சிந்தூர் ஆபரேஷன் பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினர் காட்டிய தீவிர பங்களிப்பிற்கு எங்களின் ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ட்ரம்ப் சரியான நேரத்தில் மற்றும் தீர்க்கமாக தலையிடாவிட்டால், ஒரு முழுமையான போரின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும்” என்று பேசியிருந்தார்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது மூன்றாம் தரப்பு (ட்ரம்ப்) தலையீடு இல்லை என்று இந்தியா திட்டவட்டமாக மறுத்த நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் பேச்சு பேசுபொருளாகியிருக்கிறது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

நாங்கள்தான் வெற்றி பெற்றோம்

மேலும், “இந்தியாவுடனான சண்டையில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம். இப்போது நாங்கள் அமைதியை விரும்புகிறோம், மேலும் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகளிலும் இந்தியாவுடன் விரிவான மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது” என்று பேசியிருந்தார் பாகிஸ்தான் பிரதமர்.

அதுமட்டுமின்றி ‘இந்துத்துவாவால் இயக்கப்படும் தீவிரவாதம்’ என்று இந்தியாவை குற்றம்சாட்டிப் பேசியிருந்தார்.

பாகிஸ்தான் பிரதமரின் பேச்சிற்குப் பதிலடி கொடுத்து ஐ.நா பொதுச்சபையில் பேசியிருக்கும் இந்திய பிரதிநிதியான படேல் கெலாட், “ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் அபத்தமான நாடகங்களை அரங்கேற்றி உள்ளார். அவர் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத்தை புனிதப்படுத்திப் பேசியிருக்கிறார். பயங்கரவாதம் பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையின் மையமாகும். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்’ பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தான் பாதுகாக்கிறது.

இந்தியா படேல் கெலாட்
இந்தியா படேல் கெலாட்

பயங்கரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததும் இதே பாகிஸ்தான். இந்தியாவில் அப்பாவி மக்கள் மீது நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்பதே உண்மை. பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுடனான அமைதி குறித்துப் பேசியுள்ளார். அவர் உண்மையிலேயே நேர்மையானவராக இருந்தால் பாகிஸ்தான் உடனடியாக அனைத்து பயங்கரவாத முகாம்களையும் மூடிவிட்டு, இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று படேல் கெலாட் பேசியிருக்கிறார்.

பாகிஸ்தான் ராணுவம்தான் இந்தியாவிடம் கெஞ்சியது

“ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் கெஞ்சியது. மே 9-ம் தேதி வரை இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் அச்சுறுத்தல்களை மேற்கொண்டது.

ஆனால் மே 10-ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் நேரடியாக கெஞ்சியது. இதனால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான எந்தவொரு பிரசனையிலும் எந்த 3-ம் தரப்பினரும் தலையிட இடமளிக்கவில்லை இந்தியா.

இந்தியா படேல் கெலாட்
இந்தியா படேல் கெலாட்

பாகிஸ்தான் வெற்று பெற்றதா?

இந்த சண்டையில் இந்தியப் படைகளால் பல பாகிஸ்தான் விமானப் படைத் தளங்கள் அழிக்கப்பட்டது. அதற்கான சான்றுகள் அனைத்துமிருக்கிறது. இந்த அழிவைத்தான் பாகிஸ்தான் வெற்றி என்று தம்பட்டம் அடிக்கிறதா?

அணு ஆயுத மிரட்டல் என்ற போர்வையில் பயங்கரவாதம் நடைபெறுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு இந்தியா ஒருபோதும் அடி பணியாது. இதை உலகிற்கு தெளிவாக சொல்லி இருக்கிறோம்.” என்று பாகிஸ்தான் பிரதமர் பேச்சுக்கு பதிலடி கொடுத்துப் பேசியிருக்கிறார் இந்திய பிரதிநிதியான படேல் கெலாட்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.