Kushi: “விறுவிறு விஜய், துறுதுறு ஜோதிகா!'' – ̀குஷி' ரீ ரிலீஸ் குறித்து பாடலாசிரியர் வைரமுத்து

‘கில்லி’ திரைப்படம் ரீ ரிலீஸில் அதிரடியாகக் கொண்டாடப்பட்டது. ஒரு ரீ ரிலீஸ் படத்திற்கு இப்படியான ஒரு வரவேற்பு கிடைக்குமா எனப் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தது.

அத்திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து விஜய் – ஏ.எம். ரத்னம் கூட்டணியில் உருவான ‘குஷி’ படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

Kushi Re Release
Kushi Re Release

ரீ ரிலீஸில் படத்திற்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்து வருகிறது. பாடல்களை ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடும் காணொளிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘குஷி’ ரீ ரிலீஸ் குறித்து அப்படத்தின் பாடலாசிரியர் வைரமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவு இட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், “குஷி படத்தின் மறு வெளியீடு பாடல்களை மீண்டும் ஆசை ஆசையாய் அசைபோட வைக்கிறது. பாடல்கள் வசப்படாத படம் மறுவெளியீட்டுக்கு வசதிப்படாது.

கால் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தின் பால்ய வயது மற்றும் பதின்ம வயதுக்காரர்களின் நினைவுத் தடத்தில் இன்னும் கும்மி கொட்டிக்கொண்டே இருக்கின்றன ‘குஷி’ பாடல்கள்.

ஆர்மோனியக் கட்டைகளையும் மக்களின் நரம்புகளையும் ஒருசேரத் தொடத்தெரிந்தவர் தேவா.

என் நெஞ்சிலிருந்த காதல் தானே எழுந்துகொண்டதா? நீ எழுப்பினாயா? என்பது பாடலின் உள்ளடக்கம். கதைவழி இதை ஒரு கவிதை செய்ய முயன்றேன்.

‘மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும் முட்டும் தென்றல் தொட்டுத் தொட்டுத் திறக்கும் அது மலரின் தோல்வியா? இல்லை காற்றின் வெற்றியா? கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கிக் கிடக்கும் சின்ன உளி தட்டித் தட்டி எழுப்பும் அது கல்லின் தோல்வியா? இல்லை உளியின் வெற்றியா?’

‘கமர்ஷியல்’ பாட்டில் இப்படி ஒரு கவிதை, தீபாவளி வாரத்தில் ரங்கநாதன் தெருவில் புல்லாங்குழல் வாசித்தமாதிரி அபாய முயற்சி.

எஸ்.ஜே.சூர்யாவின் கலைத் துணிச்சல் அபாரமானது. விறுவிறு விஜய் துறுதுறு ஜோதிகா இருவரும் பரபர செய்துவிட்டார்கள் பாடலை.

திரைக்கதை நுண்மைகளால் எப்போதும் இளமையாய் இருக்கும். இந்தப் படம் பாடலைக் கேட்டு என் நாற்பதுகளுக்கு நகர்கிறேன்.

நானும் இப்படி இனிமேல் படங்கள் வருமா? பாடல்கள் வருமா? வரவேண்டும்,” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.