புதுடெல்லி,
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டில் இந்தியா வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2.57 கோடியாக உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 8.89 சதவீதம் அதிகமாகும். இதில் 35 முதல் 44 வயது பிரிவினர் 20.67 சதவீதமாகவும், 45 வயது முதல் 54 வயது பிரிவினர் 20.24 சதவீதமாகவும் உள்ளனர். பாலினத்தின் அடிப்படையில் ஆண்கள் 57.7 சதவீதமாகவும், பெண்கள் 42.3 சதவீதமாகவும் உள்ளனர்.
மத்திய அரசால் பாதுகாக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் சுற்றுலா தலங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளால் அதிகம் பார்வையிட்ட தலமாக உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் உள்ளது. உள்நாட்டு பயணிகள் 62.60 லட்சம், வெளிநாட்டு பயணிகள் 6.40 லட்சம் பேர் என மொத்தம் 69 லட்சம் பேர் தாஜ்மகாலை பார்வையிட்டுள்ளனர்.
தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக ஒடிசாவில் உள்ள கோனார்க் சூரிய கோவிலை 35.70 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். மேலும் டெல்லியில் மெக்ராலி பகுதியில் அமைந்துள்ள குதுப் மினாரை 32 லட்சம் உள்நாட்டு பயணிகளும், 2.20 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு வந்த வெளிநாடுவாழ் இந்தியர்களின் எண்ணிக்கை 1.62 கோடியாக உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 13.22 சதவீதம் அதிகமாகும். கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் 52.19 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஆண்டில் அமீரகத்துக்கு அதிக இந்தியா்கள் பயணித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா, அமெரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூர், இங்கிலாந்து, கத்தார், கனடா, குவைத், ஓமன் ஆகிய நாடுகளுக்கு அதிக இந்தியர்கள் பயணித்துள்னர்.
வெளிநாடுகளுக்கு 98.4 சதவீத இந்தியர்கள் விமான பயணம் மூலமாகவே சென்றுள்ளனர். 1.54 சதவீதம் சாலை மார்க்கமாகவும், 0.54 பேர் கடல்வழி மார்க்கமாகவும் சென்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.