கரூர் துயரம்: விசாரணையை தொடங்கினார் அருணா ஜெகதீசன் – சம்பவ இடத்தில் ஆய்வு

கரூர்: கரூரில் நிகழ்ந்த துயர சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தனது ஆய்வை தொடங்கி உள்ளார். கரூர் வேலுசாமிபுரத்துக்கு வந்த அவர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய்யின் பிரச்சாரம் கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று இரவு சுமார் 7.30 மணி அளவில் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, இது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேலுசாமிபுரத்துக்கு வருகை தந்தார். அப்போது, அசம்பாவிதம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் அவருக்கு விளக்கினர். மேலும், அருணா ஜெகதீசன் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர்கள் பதில் அளித்தனர். தொடர்ந்து, சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்களிடமும் அவர் சில கேள்விகளை முன்வைத்தார்.

வேலுசாமிபுரத்தில் சம்பவம் நடந்த இடம் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு வெளியாட்கள் யாரும் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவத்துக்குப் பிறகு அங்கு எத்தகைய சூழல் ஏற்பட்டதோ அது அப்படியே இருந்தது. அவற்றை அருணா ஜெகதீசன் பார்வையிட்டார். பொதுமக்களின் ஏராளமான காலனிகள், கட்சிக் கொடிகள் போன்றவை சிதறிக்கிடந்ததைப் பார்வையிட்ட அருணா ஜெகதீசன், நிகழ்ச்சி தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

குறிப்பாக, கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதா? போலீஸ் பாதுகாப்பு எப்படி இருந்தது? எத்தனை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்? எத்தகைய அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என்பன உள்ளிட்ட கேள்விகளை அவர் எழுப்பியதாகத் தெரிகிறது.

இந்த ஆய்வை அடுத்து, சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை அவர் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தியவர் அருணா ஜெகதீசன். அப்போது, அவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதேபோல், இந்த சம்பவம் குறித்தும் கூடிய விரைவில் அவர் தனது அறிக்கையை அரசுக்கு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.