குவாங் டிரை,
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் புவலாய் புயல் தாக்குதலால் பல்வேறு நகரங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. வீடுகள், கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளன. மரங்கள் முறிந்து விழுந்தன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இதனால், 23 ஆயிரம் குடும்பங்கள் புலம் பெயர்ந்து சென்றன. 1,400 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். புயலால், மத்திய பிலிப்பைன்சில் 20 பேர் வரை பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், வியட்நாம் நோக்கி புயல் நகர்ந்து உள்ளது. அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனால், வியட்நாமின் மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
புயலால் மணிக்கு 133 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழை பெய்து, அதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.