புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் 27 இந்திய வீரர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக ரஷ்ய ராணுவத்தில் வெளிநாட்டினர் அதிக அளவில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். மத்திய அரசின் வலியுறுத்தலின்பேரில் கடந்த சில ஆண்டுகளில் 96 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர். சுமார் 12 இந்திய வீரர்கள் போரில் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் கூறியதாவது: ரஷ்ய ராணுவத்தில் சுமார் 27 இந்தியர்கள் உள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் ரஷ்யாவிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. ரஷ்ய ராணுவத்தில் இருக்கும் இந்திய வீரர்களின் குடும்பங்களிடம் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். ரஷ்ய ராணுவத்தில் சேரும்படி யார் அழைப்பு விடுத்தாலும் அதை நிராகரிக்க வேண்டுகிறோம்.இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய ராணுவத்தில் இருந்து இந்தியா திரும்பிய வீரர்கள் கூறியதாவது: சில ஏஜெண்டுகள் இந்திய மாணவர்களிடம் ஆசை வார்த்தை கூறி ரஷ்ய ராணுவத்தில் சேர்த்து விடுகின்றனர். அவர்களுக்கு 10 நாட்கள் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதன்பிறகு அவர்கள் போர் முனைகளில் நிறுத்தப்படுகின்றனர்.
ரஷ்ய ராணுவத்தில் இணைக்கப்பட்ட இந்திய வீரர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிடப்படுகிறது. இதனால் அவர்கள் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசுவதுகூட மிகவும் கடினமாக உள்ளது. இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் ரஷ்ய ராணுவத்தில் உள்ளனர். இவ்வாறு இந்திய வீரர்கள் தெரிவித்தனர்.