India Squad For ODI Series vs Australia:ஆசிய கோப்பையை வென்ற கையோடு இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான உத்தேச இந்திய அணி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில், ஆசிய கோப்பையின் நாயகன் அபிஷேக் ஷர்மாவுக்கு முதல் முறையாக ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் அணிக்கு திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Add Zee News as a Preferred Source
கேப்டனாக ரோஹித்?
இந்த ஒருநாள் தொடரில், மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் ரோஹித் ஷர்மா, தனது உடற்தகுதியை நிரூபித்துள்ளதால், இந்த தொடரில் இந்திய அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் லண்டனில் தனது உடற்தகுதியை நிரூபித்துள்ள விராட் கோலியும் அணிக்கு திரும்புகிறார். இது, விராட் கோலியின் கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அபிஷேக் ஷர்மாவுக்கு முதல் வாய்ப்பு
ஆசிய கோப்பை மற்றும் சமீபத்திய டி20 போட்டிகளில் தனது அதிரடியான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்த இளம் வீரர் அபிஷேக் ஷர்மா, ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவிற்கு ஒரு அதிரடியான தொடக்கத்தை அளிப்பார் என்ற நம்பிக்கையில், அவருக்கு முதல் முறையாக ஒருநாள் அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு திரும்புகிறார்.
ஷ்ரேயாஸ் ஐயர் வருகை
2027ம் ஆண்டு தான் ஒருநாள் உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்த ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்டு டி20 தொடரில் மட்டும் அவர் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், காயத்திலிருந்து மீண்டுள்ள மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்புகிறார். ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அனுபவமும், இளமையும் கலந்த ஒரு வலுவான அணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த வீரர்களின் வழிகாட்டுதலும், இளம் வீரர்களின் அதிரடியும், ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உத்தேச இந்திய ஒருநாள் அணி
ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, முகமது சிராஜ்.
About the Author
RK Spark