துபாய்,
ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த மோதலில் பாகிஸ்தான் நிர்ணயித்த 147 ரன்கள் என்ற இலக்கை 2 பந்துகள் மீதம் வைத்து இந்திய அணி எட்டிப்பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடித்தந்த திலக் வர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், நடப்பு ஆசிய கோப்பை தொடரில் தனக்கு கிடைத்த போட்டிக்கான கட்டணத்தை பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் மற்றும் ஆயுதப்படைக்கு அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் நமது ஆயுதப் படைக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் இந்த தொடருக்கான எனது போட்டிக் கட்டணத்தை வழங்க முடிவு செய்துள்ளேன். நீங்கள் எப்போதும் என் நினைவுகளில் உள்ளீர்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.