Doctor Vikatan: எனக்கு எப்போதும் வெறும் தரையில் படுத்துத் தூங்கிதான் பழக்கம். ஆனால், ஊரிலிருந்து வந்த உறவினர், வெறும் தரையில் படுத்துத் தூங்கினால் ரத்தமெல்லாம் சுண்டிப்போய் விடும் என்றும் அதைத் தவிர்க்குமாறும் சொல்கிறார். இது உண்மையா?
பதில் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.

வெறும் தரையில் படுத்துத் தூங்கினால் ரத்தம் சுண்டிப்போகுமா என்ற கேள்விக்கு நேரடியான பதில் ‘இல்லை’ என்பதுதான். ஆனால், அப்படிச் சொல்லப்படுவதன் பின்னால் பல விஷயங்கள் உள்ளன.
தரையில் படுப்பது நல்லதா, கெட்டதா என்பது அவரவர் வயது, உடல்நிலை, எப்படிப் படுக்கிறார்கள் என்பதை எல்லாம் பொறுத்து மாறுபடும்.
பொதுவாக, வெறும் தரையில் படுக்கும்போது, தரையின் குளிச்சியின் காரணமாக கால்கள் மரத்துப்போகும். கடினமான தரைப்பகுதி என்றால், உடல் பருமன் உள்ளவர்களுக்கு நரம்பு அழுத்தம் ஏற்படலாம்.
இதுவும் கால்களை மரத்துப்போக வைக்கும். தரை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்போது, நம் உடலில் உள்ள சூடு, தரையோடு கனெக்ட் ஆகும். அப்போதும் மரத்துப்போவது சீக்கிரமே நடக்கும்.
இந்தக் காரணங்களுக்காக, நீரிழிவு உள்ளோரை வெறும் தரையில் படுக்க வேண்டாம் என அறிவுறுத்துவோம்.
முதுகுவலி உள்ளவர்கள், ஏற்கெனவே சயாட்டிகா போன்ற பிரச்னை உள்ளவர்கள் போன்றோர் குஷன் இல்லாமல் படுக்கும்போது அவர்களது வலி அதிகரிக்கக்கூடும்.

மரத்துப்போவது என்ற பிரச்னையை ரத்த ஓட்டம் குறைதல் என் கணக்கில் புரிந்துகொள்வதால்தான், வெறும் தரையில் படுத்தால் ரத்தம் சுண்டிப்போகும் என்று சொல்கிறார்கள்.
உண்மையில், ரத்தம் சுண்டிப்போவதில்லை. ஆனால், மரத்துப்போவது நிச்சயம் நடக்கும். எனவே, எப்போதும் மெலிதான படுக்கை அல்லது கனமான போர்வையை விரித்து அதன் மேல் படுத்தால் மேற்குறிப்பிட்ட பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
முதுகுவலி உள்ள சிலருக்கு தரையில் படுக்கும்படி அறிவுறுத்துவோம். அப்போதும் வெறும் தரையில் படுக்காமல், இப்படி ஏதேனும் விரிப்பின் மேல்தான் படுக்கச் சொல்வோம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.