குறைவான கூலி, கடுமையான வேலை: புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான கொடுமைக்கு தீர்வு கோரும் சிபிஎம்

சென்னை: எண்ணூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைவான கூலிக்கும், கடுமையாக வேலை வாங்கும் முறைக்கும் புலம் பெயர் தொழிலாளர்களை பயன்படுத்தும் கொடுமைகளுக்கு அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள வயலூர் ஊராட்சியில் எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து, பணி செய்து கொண்டிருந்த 9 வட மாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம் பகுதியில் அமைந்துள்ள 2 X 660 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது. பாரத் ஹெவி எலக்ட்ரிக்ஸ் நிறுவனத்திற்கு இந்த கட்டுமானப் பணிகளை முழுமையாக முடித்துக் கொடுப்பதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் அளித்துள்ளது. இந்த தொழிற்சாலையில் அடுத்தடுத்து கட்டுமானப் பணிகளின் போது விபத்து நடைபெறுவதும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மரணத்தை எதிர்கொள்வதும் அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு மாதத்தில் மீஞ்சூர் பகுதியில் நடந்த இரண்டாவது விபத்தாகும் இது. கடந்த விபத்தின் போது ஒரு தொழிலாளர் உயிரிழந்தார். தற்போது 150 அடி உயரத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் சாரம் சரிந்து 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்சார வாரியமும், ஒப்பந்தம் எடுத்த பெல் நிறுவனமும் இணைந்து மேற்கொண் டிருக்க வேண்டும். அதை செய்யாததன் விளைவே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டுகிறது.

குறைவான கூலிக்கும், கடுமையாக வேலை வாங்கும் முறைக்கும் புலம் பெயர் தொழிலாளர்களை பயன்படுத்தும் கொடுமைகளுக்கு அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். அவர்களுக்கு சட்டப்படியான பாதுகாப்பு, வேலை நேரம், சட்டப்படியான கூலி உள்ளிட்டவைகள் வழங்கு வதையும், குறிப்பாக, புலம் பெயர் தொழிலாளர் சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுவதையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டும். மனித உழைப்பை, உயிரை மதிக்காத நிறுவனங்களுக்கான ஒப்பந்த உரிமைகளை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மேலும், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சமும், மத்திய அரசு ரூ.2 லட்சமும் நிவாரணம் அளித்துள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் 30 வயது மதிக்கதக்க இளைஞர்கள் என்பதால் ஒப்பந்தம் எடுத்துள்ள பெல் நிறுவனத்திடம் இருந்து உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடும், படுகாயமுற்று சிகிச்சையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு உயர் தர மருத்துவ சிகிச்சையும், பாதிப்புக்கு ஏற்ற இழப்பீடும் வழங்கிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” என்று பெ.சண்முகம் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.