பயனர்களின் உரையாடலை ஒட்டுக் கேட்கிறதா இன்ஸ்டாகிராம்? – மெட்டா அதிகாரி விளக்கம்

பயனர்களின் உரையாடலை மைக்ரோபோன் மூலம் ஒட்டுக் கேட்கிறதா இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் என்பதற்கு அந்த தளத்தின் தலைவர் ஆடம் மொஸேரி விளக்கம் அளித்துள்ளார்.

மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-ல் தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் மெட்டா (அப்போது ஃபேஸ்புக்) அதனை வாங்கியது. இன்று உலக அளவில் மாதந்தோறும் பில்லியன் கணக்கான ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இச்சூழலில் இந்த தளத்தை பயன்படுத்தி வரும் பெரும்பாலான பயனர்களுக்கு ஒரு சந்தேகம் எப்போதும் இருப்பது உண்டு. அது என்னவென்றால், இன்ஸ்டா பயனர்கள் தங்களது நண்பர்களுடன் கலந்து பேசியது விளம்பரமாக இன்ஸ்டா ஃபீடில் வருவதுதான். இதனால் பயனர்களின் உரையாடலை போனில் உள்ள மைக்ரோபோன் மூலம் இன்ஸ்டா தளம் ஒட்டுக் கேட்கிறதா என்பதுதான் அந்த ஐயம். அதற்கு இப்போது ஆடம் மொஸேரி வீடியோ மூலம் விளக்கம் கொடுத்துள்ளார்.

“நிச்சயம் பயனர்கள் பேசுவதை மைக்ரோபோன் மூலம் நாங்கள் கேட்பது கிடையாது. அப்படி செய்தால் அது பிரைவசி விதிமுறைகளை மீறியதாக அமையும். மேலும், மைக்ரோபோனை இன்ஸ்டா தளம் பயன்படுத்தினால் உங்களது போனில் நோட்டிபிகேஷன் லைட் ஒளிரும், அதோடு போனின் பேட்டரி சக்தியும் குறையும். அந்த வகையில் எந்த பயனரையும் நாங்கள் ஒட்டுக் கேட்பதில்லை.

அதேநேரத்தில் பயனர்கள் பேசியது குறித்த விளம்பரங்கள் இன்ஸ்டா ஃபீடில் வந்தால் அது தற்செயலானது. வேறு எதுவும் இல்லை. அதற்கான காரணங்கள் பல உள்ளன. உங்கள் இன்ஸ்டா வட்டத்தில் இருப்பவர்கள் அது குறித்து இணையவெளியில் தேடி இருக்கலாம். மேலும், பயனர்கள் எங்கள் தளத்தில் எதை விரும்புகிறார்கள் என்பதை இன்ஸ்டா தளம் கவனிக்கும். அதன் ஊடாகவும் இது அமையும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு கடந்த 2016 மற்றும் 2018-ல் மைக்ரோபோன் மூலம் பயனர்களை மெட்டா தளம் உளவு பார்ப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அந்நிறுவனம் மறுத்துள்ளது நினைவுகூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.