IND vs WI: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி… வாடி வதங்கிய வெஸ்ட் இண்டீஸ் – ஆட்ட நாயகன் ஜடேஜா

India vs West Indies 1st Test: மேற்கு இந்திய தீவுகள் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டும் மோதுகின்றன.

Add Zee News as a Preferred Source

முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த அக். 2ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி 162 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்களை அடித்தார். இந்திய பந்துவீச்சில் சிராஜ் 4, பும்ரா 3 விக்கெட்டை வீழ்த்தினர்.

India vs West Indies: இந்தியாவின் 3 வீரர்கள் சதம் 

தொடர்ந்து, முதல் நாளின் மூன்றாவது செஷனிலேயே இந்தியா பேட்டிங் செய்ய தொடங்கியது. கேஎல் ராகுல் அன்றே அரைசதம் அடித்தார். தொடர்ந்து நேற்றைய இரண்டாம் நாள் முழுவதும் இந்தியாவே பேட்டிங் செய்தது. கேஎல் ராகுல் 100, துருவ் ஜுரேல் 125, ஜடேஜா 104* என மூன்று வீரர்கள் சதம் அடித்தனர். கில் 50 ரன்களை அடித்து ஆட்டமிழந்திருந்தார். ஜெய்ஸ்வாலும் 36 ரன்களை அடித்திருந்தார். சாய் சுதர்சன் மட்டும் 7 ரன்கள் அடித்து சொதப்பினார். மேற்கு இந்திய தீவுகள் அணி கேப்டன் சேஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

India vs West Indies: அரை நாளில் ஆட்டத்தை முடித்த இந்தியா

இந்திய அணி 448 ரன்களை குவித்த நிலையில், மூன்றாம் நாளான இன்று காலையிலேயே டிக்ளர் செய்தது. அதன்படி இன்று இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி மதிய உணவு இடைவேளையின் போதே 5 விக்கெட்டுகளை இழந்தது. 6வது விக்கெட்டுக்கு ஜஸ்டின் கிரீவ்ஸ் – காரி பியர் ஜோடி 46 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆறுதல் அளித்தது. இந்த ஜோடியை இரண்டாவது செஷனில் வாஷிங்டன் சுந்தர் பிரித்தார். அதன்பின் விக்கெட்டுகள் வரிசையாக விழத் தொடங்கின. அதன்படி 146 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல்-அவுட்டானது.

India vs West Indies: ஆட்ட நாயகன் ஜடேஜா

இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கிரீவ்ஸ் 25 ரன்களை அடித்தார். இந்திய அணி பந்துவீச்சில் ஜடேஜா 4, சிராஜ் 3, குல்தீப் 2, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டை வீழ்த்தினர். பேட்டிங்கில் சதம் அடித்து, 4 விக்கெட்டையும் வீழ்த்திய ஜடேஜா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

India vs West Indies: அடுத்த போட்டியில் என்னென்ன மாற்றம் வரும்?

தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 2வது டெஸ்ட் போட்டி வரும் அக். 10ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் முக்கிய பல வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படலாம். பும்ரா, வாஷிங்டன் சுந்தருக்கு ஓய்வளிக்கப்பட்டு பிரசித் மற்றும் அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இல்லையெனில் சாய் சுதர்சனுக்கு பதில் தேவ்தத் படிக்கல் களமிறங்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.