அமெரிக்காவில் இந்திய பல் மருத்துவ மாணவர் படுகொலை: தெலுங்கானா முதல்-மந்திரி, முன்னாள் மந்திரி ஆறுதல்

நியூயார்க்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் போலே (வயது 27). பல் மருத்துவத்தில் அறுவை சிகிச்சை படிப்பை முடித்து விட்டு, மேல் படிப்புக்காக 2023-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றார். இதில், முதுநிலை படிப்பில் சேர்ந்து படித்து வந்த அவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதனை முடித்துள்ளார்.

நிரந்தர வேலை தேடி வந்த அவர், அது கிடைக்கும் வரை அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் உள்ள எரிவாயு நிலையம் ஒன்றில் பகுதி நேர பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், பணியில் இருந்த அவரை நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினார்.

இதில், பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவம் தெலுங்கானாவில் உள்ள அவருடைய பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, சந்திரசேகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியதுடன் அவருடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அரசு சார்பில் அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என உறுதி கூறினார்.

இதேபோன்று, பாரத ராஷ்டிர சமிதியின் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் மந்திரியான டி. ஹரீஷ் ராவ் நேரில் சென்று சந்திரசேகரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொண்டார். அவருடைய உடலை கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராவ் கேட்டு கொண்டார்.

சந்திரசேகரின் தாயார் சுனிதா செய்தியாளர்களிடம் பேசும்போது, கருப்பின மக்கள் அவரை சுட்டு கொன்றனர் என தகவல் கிடைத்தது என்று கூறினார். இந்தியர்களின் பாதுகாப்பை மத்திய மற்றும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோளாக கேட்டு கொண்ட அவர், சந்திரசேகரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டு கொண்டார்.

டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த மாதம், சந்திர மவுலி பாப் நாகமல்லையா என்ற 50 வயது இந்திய வம்சாவளியை சேர்ந்த மோட்டல் மேலாளர் அவருடைய மனைவி, மகன் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.