ஆசிய கோப்பை 2025 தொடரில் இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியது. கடந்த முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் இந்த முறை மோசமான தோல்வியை சந்தித்து. இந்த படுதோல்வியை தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் தனது பயிற்சியாளர் குழுவில் அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. இலங்கை அணியின் பேட்டிங் மற்றும் சுழற்பந்துவீச்சு துறைகளை வலுப்படுத்தும் நோக்கில், இரண்டு புதிய வெளிநாட்டு பயிற்சியாளர்கள் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மாற்றங்கள், 2026 டி20 உலக கோப்பை மற்றும் அணியின் எதிர்கால செயல்திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
Add Zee News as a Preferred Source
ஏமாற்றமளித்த ஆசிய கோப்பை
சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில், இலங்கை அணி லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டது. ஆனால், சூப்பர் ஃபோர் சுற்றில் தனது மூன்று போட்டிகளிலும் தொடர் தோல்விகளை சந்தித்து, இறுதி போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வி மற்றும் இந்தியாவுக்கு எதிரான சூப்பர் ஓவர் தோல்வி ஆகியவை இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதற்கு முன்னர், ஜூலை மாதம் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரிலும் இலங்கை அணி தோல்வியை தழுவியிருந்தது. இந்த தொடர் தோல்விகளின் விளைவாகவே, பயிற்சியாளர் குழுவை மாற்றியமைக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
புதிய பேட்டிங் பயிற்சியாளர்
இங்கிலாந்தை சேர்ந்த பவர்-ஹிட்டிங் நிபுணரான ஜூலியன் வுட், இலங்கை அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக ஓராண்டு ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திலின கண்டம்பியின் இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்பு ஜூலியன் வுட் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம், கிளௌசெஸ்டர்ஷைர், ஹாம்ப்ஷயர், மிடில்செக்ஸ் போன்ற கவுண்டி அணிகளுடனும், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடனும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சமீபத்தில் இலங்கை வீரர்களுக்கு ஒரு வார கால பவர்-ஹிட்டிங் பயிற்சி முகாமை நடத்தியபோது, இவரது அணுகுமுறை இலங்கை கிரிக்கெட் வாரியத்தை மிகவும் கவர்ந்ததே இந்த பணி நியமனத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
புதிய சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளர்
இலங்கை அணியின் புதிய சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக ரீன் ஃபெர்டினான்ட்ஸ் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2006 ஆம் ஆண்டு முதல் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றி வந்த பியல் விஜேதுங்கேயின் இடத்திற்கு வருகிறார். ஃபெர்டினான்ட்ஸ், விளையாட்டு துறையில் அறிவியல் அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர். இவர் நியூசிலாந்தின் வைகாடோ பல்கலைக்கழகத்தில் உயிர் இயந்திரவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.
இதற்கு முன்பு இந்தியாவின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உயர்நிலை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு உயிர் இயந்திரவியல் சார்ந்த பயிற்சி திட்டங்களை வழங்கியுள்ளார். மேலும், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆலோசகராகவும் பணியாற்றி, முன்னணி பந்துவீச்சாளர்களின் செயல்திறன் மற்றும் காயம் ஏற்படும் அபாயங்களை மதிப்பீடு செய்துள்ளார். மணிக்கட்டு மற்றும் விரல் சுழற்பந்து வீச்சு ஆகிய இரண்டிலும் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றங்களின் மூலம், இலங்கை அணி தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு துறைகளில் உள்ள குறைகளை களைந்து, வரவிருக்கும் சர்வதேச போட்டிகளுக்கு தங்களை முழுமையாக தயார்படுத்திக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About the Author
RK Spark