India vs Australia: அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரை ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் விளையாட உள்ளன.
Add Zee News as a Preferred Source
India vs Australia: டெஸ்ட் டூ ஓடிஐ
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலியா செல்கிறது. கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அக்சர் பட்டேல், நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் 2வது டெஸ்ட் வரும் அக். 14ஆம் தேதி அன்று முடிந்ததும் ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவார்கள்.
அக். 19ஆம் தேதி ஓடிஐ தொடர் நடைபெறுகிறது. அக். 19, அக்.23, அக். 25 ஆகிய மூன்று நாள்கள் ஓடிஐ போட்டிகள் நடைபெறுகின்றன. டி20ஐ தொடர் அக். 29, அக். 31, நவ. 2, நவ. 6, நவ. 8 ஆகிய நாள்களில் நடைபெறுகின்றன. அந்த வகையில், ஓடிஐ மற்றும் டி20ஐ தொடருக்கான இந்திய அணி ஸ்குவாட் நேற்று பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டன.
India vs Australia: ஓடிஐ மற்றும் டி20ஐ அணிகள் அறிவிப்பு
இந்திய ஓடிஐ அணி கேப்டனாக இருந்து ரோஹித் சர்மா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து ஓடிஐ போட்டிகளிலும் சுப்மான் கில் கேப்டன்ஸியை பெற்றிருக்கிறார். ஷ்ரேயாஸ் ஐயருக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அணியில் நீடிக்கின்றனர். இருப்பினும் 2027 ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு இவரின் இடமும் உறுதியாகவில்லை என அகர்கர் கூறியது கவனிக்கத்தக்கது.
ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் காயமடைந்ததன் காரணமாக ஓடிஐ மற்றும் டி20ஐ தொடரிலும் இடம்பெறவில்லை. சுப்மான் கில், நிதிஷ்குமார் ரெட்டி, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா ஆகியோர் ஓடிஐ மற்றும் டி20ஐ போட்டிகளில் விளையாடுகின்றனர். வருண் சக்ரவர்த்திக்கு இம்முறை ஓடிஐ அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆசிய கோப்பை தொடரில் விளையாடியே அதே டி20ஐ அணிதான் ஆஸ்திரேலியா செல்கிறது, ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் நிதிஷ்குமார் மட்டும் இடம்பெற்றுள்ளார்.
ஜடேஜா குறித்து பிசிசிஐ
ஓடிஐயில் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் செயல்படுவார், பேக்அப் விக்கெட் கீப்பராக துருவ் ஜுரேலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஓடிஐ அரங்கில் நிதிஷ்குமார், துருவ் ஜுரேல் இதுவரை விளையாடியதில்லை. பலரும் ஆச்சர்யப்படும் விதமாக ஜடேஜா மற்றும் ஷமி ஆகியோருக்கும் ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜடேஜா ஓடிஐ தொடரில் மட்டுமே விளையாட முடியும் என்பதால், ஏற்கெனவே அக்சர் பட்டேல், வாஷிங்டன் ஆகிய 2 சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள் இருக்கையில் மூன்றாவது ஸ்பின் ஆல்-ரவுண்டரை எடுக்க முடியாது என்பதற்காக அவரை எடுக்கவில்லை என்றும் அவர் தங்களின் கவனத்தில் இருப்பார் என்றும் தேர்வுக்குழு தெரிவித்தது.
ஷமிக்கு இனி வாய்ப்பில்லை
ஆனால் ஷமியின் நிலைமையோ மிக மிக மோசம். அவர் இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் வாய்ப்பளிக்கவில்லை. அதேநேரத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஓடிஐ மற்றும் டி20ஐ தொடரிலும் தற்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. பும்ரா ஓடிஐ தொடரில் இல்லாதபோதும் கூட அவருக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்படாததன் மூலம் அவர் இந்திய அணியின் தேர்வுக்குழுவின் யோசனையிலேயே இல்லை என்பது தெரியவருகிறது.
முடிவுக்கு வந்த சகாப்தம்
35 வயதான ஷமி தனது உடற்தகுதியை மீட்டு பார்முக்கு திரும்பினாலும் கூட, முக்கிய பௌலர்கள் காயமடைந்தால் ஒழிய அவருக்கு வாய்ப்பு கிடைக்க இனி வழியே இல்லை. இதனால் அவரை இந்திய அணியில் பார்ப்பது மிக மிக கடினம் எனலாம். 2013ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடி வரும் அவரது கிரிக்கெட் சகாப்தம் கடந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பையோடு நிறைவடைந்தது என பலரும் இப்போதே பேசத் தொடங்கியும்விட்டனர்.
About the Author
Sudharsan G