பழனிசாமியின் நாமக்கல் பிரச்சாரம் 3-ம் முறையாக ஒத்திவைப்பு: காவல் துறை அனுமதி மறுப்பு

நாமக்கல்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த பிரச்சாரத்தின் தேதி 3-வது முறையாக மாற்றம் செய்யயப்பட்டுள்ளது. இதன்படி அக்.8,9-ம் தேதிக்கு அவரது பிரச்சாரம் மாற்றப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எனும் பெயரில் தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் மாதம் 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் நாமக்கல் மாவட்டத்தில் அவரது சுற்றுப்பயணம் திட்டப்பட்டிருந்தது. இதில் செப்.19-ம் தேதி ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய இரு தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் செப். 20, 21 தேதிகளில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது.

இதன்காரணமாக எடப்பாடி பழனிசாமியின் அடுத்த இரு நாட்கள் சுற்றுப்பயணம் அக்.4,5-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பின், திடீரென அக்.,5,6-ம் தேதிக்கு அவரது சுற்றுப்பயணம் மாற்றப்பட்டது. இதன்படி அக்.,5-ம் தேதி திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதியிலும், 6-ம் தேதி நாமக்கல், பரமத்தி வேலூர் தொகுதியிலும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக கட்சியின் தலைமை கழகம் அறிவித்தது.

இச்சூழலில் 3-வது முறையாக இத்தேதியும் மாற்றம் செய்து அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதன்படி அக்.8-ம் தேதி திருச்செங்கோடு, குமாரபாளையம், 9-ம் தேதி நாமக்கல், பரமத்தி வேலூரில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

ஒத்திவைப்புக்கான காரணம்: அக்.5, 6-ம் தேதி எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 4 இடங்களும் மாநில நெடுஞ்சாலைக்கு உட்பட்ட இடம் என்பதால் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை காரணம்காட்டி நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். எனவே மாவட்ட அதிமுகவினர் மாற்று இடம் தேர்வு செய்ய உள்ளனர். இதன்காரணமாக எடப்பானி பழனிசாமியின் பிரச்சார தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக நாமக்கல் மாவட்ட அதிமுகவினர் தெரிவித்தனர்.

அதிமுகவினர் அதிருப்தி: எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு நாமக்கல் மாநகர பகுதியில் அதிமுகவினர் ப்ளெக்ஸ் பேனர்கள் உள்ளிட்ட வரவேற்பு ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக மேற்கொண்டிருந்தனர். இச்சூழலில் 3-வது முறையாக எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.