பிரான்ஸ்,
ஜப்பான் நாட்டின் தேசிய கால்பந்து அணியின் இயக்குனர் மசனகா காகேமே. இவர் சிலியில் நடைபெற உள்ள 20 வயதுக்குட்பட்ட உலக கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக தனது அணியுடன் விமானத்தில் சென்றார். பிரான்ஸ் அருகே அவர்கள் சென்ற விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது.
அப்போது காகேமா தனது லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்து வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தார். அதனை பார்த்த பணிப்பெண்கள் இதுதொடர்பாக விமானிகளிடம் தெரிவித்தனர். பாரீஸ் விமான நிலையத்திற்கு அந்த விமானம் வந்தபோது அங்கு தயாராக காத்திருந்த போலீஸ் அதிகாரிகள் காகேமாவை கைது செய்தனர்.
பிரான்சில் குழந்தைகள் ஆபாச படம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என்ற நிலையில் அவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பாரீஸ் சிறையில் அடைத்தனர். மேலும் அவருக்கு 5,000 யூரோ(இந்திய மதிப்பில் ரூ.5.16 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விசாரணையின்போது, லேப்டாப்பில் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட படங்களை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், பிரான்ஸ் நாட்டில் உள்ள தடை பற்றி தனக்கு தெரியாது என்றும் கூறிய மசனகா காகேமே, தனது செயலை நினைத்து வெட்கப்படுவதாக கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.