புதுடெல்லி,
கடந்த 2014-ம் ஆண்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட சத்ருகன் சவுகான் என்பவருக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை விதித்தது. அதற்கு எதிராக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-
“தேசத்தின் மனசாட்சியை உலுக்கும் வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மரண தண்டனை கைதிகளுக்கு சட்ட நிவாரணம் பெற காலவரையறையே இல்லை. கொடிய குற்றங்களை செய்தவர்கள், கோர்ட்டு நடைமுறையை சாதகமாக பயன்படுத்துகிறார்கள்.
கருப்பு வாரண்டு பிறப்பித்த 7 நாட்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அவர்களது குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களையும் கோர்ட்டு கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு விதித்த வழிகாட்டு நெறிமுறைகள், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை மையப்படுத்தியே அமைந்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் ஈடு செய்ய முடியாத மன உளைச்சல், வேதனை, கொந்தளிப்பு, தேசத்தின் மனசாட்சி ஆகியவற்றை அந்த நெறிமுறைகள் கவனத்தில் கொள்ளவில்லை. ஆகவே, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூகத்தை மையப்படுத்திய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரிக்க 2020-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டது. 2014-ம் ஆண்டு உத்தரவுடன் தொடர்புடைய மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ‘மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை’ என்று கூறி, மத்திய அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.