பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான டாப் 10 இந்திய மாநிலங்கள்; தமிழகத்திற்கு எந்த இடம் தெரியுமா?,

புதுடெல்லி,

ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்ற வகையில் பணியாற்றும் இடங்களிலும் அனைத்து வேலைகளையும் செய்ய கூடிய திறன் பெற்றவர்களாக பெண்கள் முன்னேறி வருகிறார்கள். பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை நாட்டில் பெருகி காணப்படுகின்றன. அவற்றை பெண்களும் சரியாக பயன்படுத்தி கொள்கிறார்கள். விவசாயம் முதல் விண்வெளி துறை வரையும் சாதனை படைத்து வருகிறார்கள். எனினும், பணியிடங்களில் பாதுகாப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பெண்களுக்கு பணிபுரியும் பகுதியில் அவர்களுக்கு ஏற்ற சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகள், விரிவான நகர்ப்புற அமைப்பு மற்றும் பாதுகாப்பான சூழல் ஆகிய வசதிகள் கிடைக்க பெறுவது அவசியம். இவற்றை அடிப்படையாக கொண்டே அவர்களின் வாழ்க்கை முறையும் மேம்படும். பணிக்கு செல்வதற்கான ஆர்வமும் அவர்களுக்கு அதிகரிக்கும்.

இந்த நிலையில், இந்தியா ஸ்கில்ஸ் என்ற பெயரில் நடப்பு ஆண்டுக்கான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான மற்றும் விரும்ப கூடிய டாப் 10 இந்திய மாநிலங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன. உலகளாவிய கல்வி மற்றும் திறன் தொடர்பான தீர்வுகளுக்கான வீல்பாக்ஸ் என்ற அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

இதில், ஆந்திர பிரதேசம் முதல் இடத்திலும், கேரளா 2-ம் இடத்திலும் மற்றும் குஜராத் 3-ம் இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில், தமிழகம் 4-ம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. மராட்டியம், டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் அரியானா ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இதன்படி, பணிபுரியும் இடங்களில் வாழ்வதற்கேற்ற விசயங்கள் எளிமையான முறையில் கிடைக்க பெறுதல் மற்றும் பாதுகாப்பு ஆகியவை பெண்களின் தேர்வாக உள்ளது. பெண்களுக்கு வேலைவாய்ப்பு என்பது ஓர் அளவீடு என்ற அளவில் இல்லாமல், கல்வி, வாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கான பிரதிபலிப்பாகவும் உள்ளது.

இதுபோன்ற பாதுகாப்பான சூழல், உட்கட்டமைப்பு மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஆகியவை அந்த இடங்களை நோக்கி பெண்கள் படையெடுக்க வழிவகுக்கிறது. பெண் பணியாளர்களுக்கு ஆதரவான சுற்றுச்சூழலை அதிகம் கொண்டிராத மாநிலங்கள், பெண் பணியாளர்கள் முன்னேற்றத்திற்காக பங்காற்றுவதில் குறைவான வளர்ச்சி விகிதங்களை கொண்டுள்ளன.

அதனால், பணி வாய்ப்புகளை வழங்குவோர், இந்த தரவுகளை அடிப்படையாக கொள்ளலாம். அப்போது, அதிக பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக பணியிடங்களை உருவாக்கி கொள்ள முடியும். அதனுடன், ஆள்தேர்வுக்கான திட்டங்கள் மற்றும் கொள்கைகளை வகுப்பதற்கும் அவற்றை வழிகாட்டியாக கொள்ளலாம் என அறிக்கை தெரிவிக்கின்றது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.