புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில், ரூ.35,440 கோடி மதிப்பிலான இரண்டு வேளாண் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இதில், பிரதமரின் தன் தானிய விவசாய திட்டம் (PM Dhan Dhaanya Krishi Yojana) ரூ. 24,000 கோடி மதிப்பிலானது. விவசாய உற்பத்தியை மேம்படுத்துதல், நிலையான விவசாய நடைமுறையை அதிகரித்தல், அறுவடைக்குப் பிந்தைய சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்தல், நீர்பாசன வசதிகளை மேம்படுத்துத், தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாவட்டங்களில் விவசாயிகளுக்கு குறுகிய கால கடன்கள் கிடைப்பதை எளிதாக்குதல் ஆகியவற்றுக்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, ரூ. 11,440 கோடி மதிப்பீட்டில் பருப்பு வகைகளுக்கான சுயசார்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரித்தல், சாகுபடி பரப்பை அதிரித்தல், கொள்முதல், சேமிப்பு, பதப்படுத்துதல், இழப்புகளைக் குறைப்பதை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுளளது.
இவ்விரு திட்டங்களையும் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம், பிரதமரின் விவசாய வள மையங்கள், பொதுசேவை மையங்கள் ஆகியவற்றின் கீழ் விவசாயிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்று ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். பாரத ரத்னா விருது பெற்ற ஜெயபிரகாஷ் நாராயண், நானாஜி தேஷ்முக் ஆகியோரின் பிறந்த நாள். இந்திய தாயின் சிறந்த புதல்வராக விளங்கிய இவர்கள், கிராமப்புற இந்தியாவின் குரல்களாக இருந்தனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில், விவசாயிகளின் நலனுக்காக இரண்டு முக்கியமான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பிரதமரின் தன் தானிய விவசாய திட்டம், பருப்பு வகைகளுக்கான சுயசார்பு இயக்கம் ஆகிய இந்த இரண்டு திட்டங்களும், இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் பொருளாதார நிலையை மாற்றும். இந்தத் திட்டங்களுக்காக இந்திய அரசு ரூ.35,000 கோடிக்கு மேல் செலவிடத் திட்டமிட்டுள்ளது.
விவசாயமும் விவசாயிகளும் எப்போதும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றனர். காலங்கள் மாறும்போது விவசாயமும் விவசாயிகளும் அரசாங்கத்தின் ஆதரவைப் பெறுவது மிகவும் முக்கியம். துரதிர்ஷ்டவசமாக, முந்தைய அரசாங்கங்கள் விவசாயத்தையும் விவசாயிகளையும் கைவிட்டன. எனவேதான், இந்திய விவசாயம் படிப்படியாக பலவீனமடைந்து வந்தது.
இந்தியா விரைவான வளர்ச்சியை அடைய, விவசாய முறை சீர்திருத்தம் அவசியம். இந்த சீர்திருத்தம் 2014-இல் தொடங்கியது. கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் விவசாய ஏற்றுமதி கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. தானிய உற்பத்தி தோராயமாக 9 கோடி மெட்ரிக் டன்கள் அதிகரித்துள்ளன. பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தி 6.4 கோடி மெட்ரிக் டன்களுக்கு மேல் அதிகரித்துள்ளது.
இன்று, பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. விதைகள் முதல் சந்தைகள் வரை விவசாயிகளின் நலனுக்காக சீர்திருத்தங்களையும் மேம்பாடுகளையும் செயல்படுத்தியுள்ளோம்.
நாடு வளர்ச்சியடைய விரும்பினால், ஒவ்வொரு துறையிலும் தொடர் முன்னேற்றம் அவசியம். இதனைக் கருத்தில் கொண்டே பிரதமரின் தன் தானிய கிருஷி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக 100 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் 36 அரசு திட்டங்களை நாங்கள் ஒருங்கிணைத்துள்ளோம்.
இதேபோல், பருப்பு வகைகளுக்கான சுயசார்பு இயக்கம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இது பருப்பு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நோக்கம் மட்டுமல்ல, நமது எதிர்கால சந்ததியினரை மேம்படுத்துவதற்கான ஒரு பிரச்சாரமும் ஆகும்.
காங்கிரஸ் அரசு அதன் 10 ஆண்டுகளில் உரங்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி மானியத்தை வழங்கியது. கடந்த 10 ஆண்டுகளில் எங்கள் அரசு ரூ.13 லட்சம் கோடிக்கு மேல் உரங்களுக்கு மானியத்தை வழங்கியுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ.6,000 செலுத்துகிறது. இதுவரை, இந்த திட்டத்தின் மூலம் ரூ.3.75 லட்சம் கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.