சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா இன்று நடைபெற்று வருகிறது.
இதில் செய்திவாசிப்பாளர் கண்மணியை 2024-ம் ஆண்டின் ‘Best News Reader’ஆக தேர்வு செய்து விருது வழங்கப்பட்டிருக்கிறது.

இதில் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கும் கண்மணி, “இந்தச் செய்தித்துறைக்கு, செய்தி வாசிப்பாளராக வந்து எட்டு வருஷதுக்கு மேல ஆகிடுச்சு, விகடன் விருதுதான் என்னோட முதல் விருது. ரொம்ப மகிழ்ச்சியா, பெருமையா இருக்கு.
வாழ்க்கையில நிறைய ஏற்ற, இறக்கங்களை எதிர்கொண்டிருக்கிறேன். ரொம்ப உடைஞ்சுபோய் உட்கார்ந்திருக்கேன். அப்போவெல்லாம், எங்க அப்பாதான் எனக்கு நம்பிக்கை குடுத்து ஓட வெச்சிட்டிருந்தார். நிறைய தடைகளை, சவால்களை எதிர்கொண்டிருக்கேன்.
என் வீட்டுக்கு ஓடி வந்து நிறைய பிள்ளைகள், மாணவர்கள் ‘உங்களை மாதிரி ஆகணும்னு ஆசை’னு சொல்லுவாங்க. அவங்களுக்காக நான் இன்னும் ஓடணும், முன்னேறணும். நான் விழுந்துட்டா, ‘கண்மணி அக்கா போய் என்ன ஆச்சு தெரியுமா?’னு சொல்லி யாரையும் இந்தத் துறைக்கே வரவிட மாட்டாங்க. அவங்களுக்காக நான் உறுதியா ஓடிக்கிட்டே இருப்பேன்.

எல்லா பெண்களும் பணத்துக்காக வேலை செய்யறதில்லை, சுயமரியாதைக்காகத்தான் ஓடிக்கிட்டிருக்காங்க. அதுதான் ரொம்ப முக்கியம். அவங்களுக்குக் கை கொடுக்கும் எல்லா ஆண்களும் என்னைப் பொறுத்தவரை ஆண் தேவதைகள்’’ என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.