ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டு ‘நீதிமன்ற அவமதிப்பு’ – திமுக எம்.பி வில்சன் விவரிப்பு

சென்னை: “சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை, ‘தமிழ்நாடு அரசு அழுத்தம் போட்டு வாங்கியது’ என்று ஆதவ் அர்ஜுனா கூறிய குற்றச்சாட்டு, நீதிமன்ற அவமதிப்பாகும். அது மிகவும் தவறானது. ஆதவ் அர்ஜுனா வாய்க்கு வந்தபடி பேசுகிறார்” என திமுக எம்.பி வில்சன் தெரிவித்தார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு குறித்து வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியது: “இந்த உத்தரவால் உயிரிழந்த 41 பேர் மற்றும் காயமடைந்த 146 பேர் குடும்பங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது. ஏற்கெனவே அவர்களுக்கு தமிழக முதல்வர் ரூ10 லட்சம் வழங்கியுள்ளார், எல்லா உதவிகளும் செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, ஓர் இடைக்காலத் தீர்ப்புதான். இது இறுதி உத்தரவுக்கு உட்பட்டது. இதனால் ஏற்கெனவே அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை ரத்தாகாது. அந்த ஆணையத்தை உச்ச நீதிமன்றம் ‘டச் பண்ணவில்லை’ என்று தெரிவித்துள்ளார்கள். அந்த ஒரு நபர் ஆணையம் தொடர்ந்து செயல்படும்.

உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைகளை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றும்படி உத்தரவிட்டுள்ளது. இந்த மாற்றம் என்பது, இதுவரை சிறப்பு புலனாய்வுக் குழு மேற்கொண்ட விசாரணைகள் அனைத்தும் சரியானவையே என்ற அர்த்தத்தில் தான் நிகழ்ந்துள்ளதாகக் கருதலாம். நீதிமன்றம் விரும்பினால், ஆரம்பத்திலிருந்தே மீண்டும் விசாரிக்க உத்தரவிட வாய்ப்புகள் உள்ளது. ஆனால், இப்போதுள்ள நிலையில், விசாரணையை மாற்றச் சொல்லி மட்டுமே உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் மூன்று பேர் போலியாக மனு தாக்கல் செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தினோம். மோசடியாக ஒரு தீர்ப்பைப் பெற்றால், அது மோசடி என்று தெரியவந்தால், நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை ரத்து செய்துவிடும் என்ற ‘ஃப்ராட் விஷியட்ஸ் எவரிதிங்’ (fraud vitiates everything) என்ற கோட்பாடு இங்குப் பொருந்தும்.

இன்று மனுதாரர்கள் சார்பிலேயே வழக்கறிஞர், “எங்களுக்குத் தெரியாமலேயே மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இந்தத் தீர்ப்பு மோசடியாகப் பெறப்பட்டது என்று தெரிந்தால், நீதிமன்றம் அதை விலக்கிக் கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளது என நீதிமன்றமே தெரிவித்துள்ளது.

மோசடி செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சிறைக்கு அனுப்பப்படலாம். தீர்ப்பும் ரத்தாகும். இதனை எல்லா நீதிமன்றங்களும் கடைபிடிக்கின்றன.

அருணா ஜெகதீசன் ஆணையம் மிக முக்கியமான ஆணையம் என்றும், யார் மீது தவறு உள்ளது, யார் மீது அலட்சியம் உள்ளது என்பதைச் சொல்லக்கூடிய அதிகாரம் அதற்கு உண்டு. மேலும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு என்ன நிவாரணம் மற்றும் என்ன உரிமைகள் என்பதைச் சொல்லவும் அந்த ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.

விஜய்யின் கட்சியைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா சிபிஐ விசாரணையை வெற்றி என்று கொண்டாடுகிறார். அவர்கள் மனுவில் சிபிஐ விசாரணை கேட்கவில்லை. அவர்களின் வழக்கறிஞர்களும் சிபிஐ வேண்டாம் என்றுதான் நீதிமன்றத்தில் வாதாடினார்கள். ஆதவ் அர்ஜுனா மீது நிறைய வழக்குகள் உள்ளன, அவர் இதுவரை கரூர் செல்லவில்லை.

கரூரில் தவெக கேட்ட இடத்தையே கொடுத்தோம். தவெக கட்சியினர் ஏன் கூடிய மக்களுக்கு தண்ணீர், உணவு கொடுக்கவில்லை. இவை எல்லாம் விசாரணையில் தெரியவரும்.

மிக முக்கியமாக, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை, “தமிழ்நாடு அரசு அழுத்தம் போட்டு வாங்கியது.” என்று ஆதவ் அர்ஜுனா கூறிய குற்றச்சாட்டு, நீதிமன்ற அவமதிப்பாகும். அது மிகவும் தவறானது. ஆதவ் அர்ஜுனா வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

நீதிமன்றம் அனுமதி அளித்ததன்படி, நாங்கள் எதிர்மனு தாக்கல் செய்யவுள்ளோம். மோசடியாகப் பெறப்பட்ட தீர்ப்புகள் குறித்து நீதிமன்றத்தில் நாங்கள் கருத்துகளை தெரிவிப்போம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.