இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பே, களத்திற்கு வெளியே வார்த்தை போர் மற்றும் மனரீதியான உத்திகள் தொடங்கிவிட்டன. இது எப்போதும் ஆஸ்திரேலியா செய்யும் ஒன்று தான். ஆஸ்திரேலிய விளையாட்டு தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட விளம்பர வீடியோவில், இந்திய வீரர்களை கேலி செய்யும் விதமாகவும், ஆபாசமான சைகைகளுடனும் ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் தோன்றியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே, எதிர்ப்புகள் வலுத்ததால், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் அந்த வீடியோவை நீக்கியது. இருப்பினும், அதற்குள் அந்த வீடியோவின் காட்சிகள் பரவி, ஆஸ்திரேலிய வீரர்களின் விளையாட்டு மனப்பான்மை குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Add Zee News as a Preferred Source
Australians trolling india over handshake pic.twitter.com/fvkCkzPTia
— Mango Jam (@Mangojam01) October 15, 2025
சர்ச்சை வீடியோவில் இருந்தது என்ன?
சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையின் போது, பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்த நிகழ்வை இந்த வீடியோவில் வீரர்கள் கிண்டல் செய்துள்ளனர். அந்த வீடியோவில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல், அலிசா ஹீலி மற்றும் சோஃபி மோலினக்ஸ் ஆகியோர் இந்திய வீரர்களின் செயலை நக்கல் செய்யும் வகையில் நடித்திருந்தனர். குறிப்பாக, சில வீரர்கள் செய்த சைகைகள் ஆபாசமாகவும், அவமதிக்கும் வகையிலும் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது வெறும் விளையாட்டு ரீதியான கேலியாக இல்லாமல், தனிப்பட்ட தாக்குதலாகவும், பண்பற்ற செயலாகவும் பார்க்கப்படுகிறது.
கை குலுக்கல் சர்ச்சை
சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் கை குலுக்காமல் சென்றதாக ஒரு சர்ச்சை எழுந்தது. அந்த நிகழ்வை மையமாக வைத்தே இந்த விளம்பர வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், போட்டியின் போது எதிரணியினரை மனரீதியாக சீண்டுவதில் பெயர் பெற்றவர்கள். ஆனால், இந்த முறை அது எல்லை மீறிவிட்டதாக பலரும் கருதுகின்றனர்.
ரசிகர்களின் கடும் கண்டனம்
இந்த வீடியோவைக் கண்ட இந்திய ரசிகர்கள், சமூக வலைதளங்களில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எதிராக தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். “இது விளையாட்டு வீரர்களுக்கு அழகல்ல,” “ஐபிஎல் போட்டிகளுக்காக பணத்திற்காக வரும் போது இந்த திமிர் எங்கே போகிறது?” என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், பலரும் ஐபிஎல் போட்டிகளில் ஆஸ்திரேலியை வீரர்களை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பதிலடி கொடுக்குமா இந்தியா?
இதுபோன்ற சர்ச்சைகளுக்கு இந்திய அணி களத்தில் தனது ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுப்பது வழக்கம். இந்த விளம்பர சர்ச்சை, இந்திய வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்குமா அல்லது அவர்களின் கவனத்தை சிதறடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அக்டோபர் 19-ம் தேதி தொடங்கும் ஒருநாள் தொடரில், இந்த சர்ச்சையின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பது தெரியவரும். எது எப்படி இருந்தாலும் இந்த சம்பவம், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டிகளின் பரபரப்பை உறுதி செய்துள்ளது.
About the Author
RK Spark