Diesel Review: நல்லதொரு கருத்தினைப் பகிரும் `டீசல்', நல்லதொரு படமாக மைலேஜ் தருகிறதா?!

1979-ம் ஆண்டு வடசென்னை கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட கச்சா எண்ணெய் குழாய்கள் மீனவ சமூகத்தைக் கொதித்தெழச் செய்கிறது. ஆனால், அந்தப் போராட்டங்கள் காவல்துறை வன்முறையைக் கையாள, தோல்வியில் முடிகிறது. ஆனால், மனோகர் (சாய் குமார்) என்பவர் அந்த குழாயின் நடுவே துளையிட்டு கச்சா எண்ணெய்யைத் திருடி டீசல் மாஃபியாவை உருவாக்குகிறார். அதன் வருமானத்தைப் பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்திற்குப் பகிர்ந்தளிக்கிறார். மேலும் பெற்றோரை இழந்த வாசுவை (ஹரிஷ் கல்யாண்) வளர்ப்பு மகனாகவும் வளர்க்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கெமிக்கல் இன்ஜினியரான வாசு, அப்பாவின் மாஃபியாவை தொழிலைத் தொடர்கிறார். ஆனால், இவர்களுக்குப் போட்டியாக பாலமுருகனும் (விவேக் பிரசன்னா) தொழிலில் இறங்க, டி.சி.பி. மாயவேலும் (வினய் ராய்) அவருடன் இணைகிறார். இதன் பின் நடக்கும் களேபரங்களில் ஓங்கியது வாசுவின் கையா, மாயவேலின் கையா என்பதே இந்த ‘டீசல்’.

டீசல் படத்தில்…

ஹரிஷ் கல்யாண் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் ஹீரோவாக அவதரிக்க முயன்றிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் சிரத்தை, உணர்ச்சிகரமான காட்சிகளில் நல்லதொரு ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ், நடனத்தில் வெளிப்படும் லாகவம் என இதுவொரு நல்ல தொடக்கமே! வளர்ப்புத் தந்தையாக சாய் குமார், எமோஷனல் காட்சிகளில் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். வஞ்சம், வன்மம் கொண்ட வில்லனாக வரும் விவேக் பிரசன்னாவின் நடிப்பில் குறையேதுமில்லை. மூர்க்கமான அதிகாரியாக வரும் வினய் ராயின் வில்லத்தனம் ஒரு சில இடங்களில் மட்டுமே வேலை செய்கிறது. நாயகிகளாக அதுல்யா ரவி, அனன்யா ஆகியோருக்கு டெம்பிளேட் கதாபாத்திரங்கள் மட்டுமே. அதிலும் அதுல்யா கதாபாத்திரம் கடல் கன்னியைத் தேடி கடலுக்குள் செல்லும் வைக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் குபீர் ரகம்! அதே போல ரமேஷ் திலக்கின் ‘விக்’கும் துருத்திக்கொண்டே இருக்கிறது. கருணாஸ், போஸ் வெங்கட், காளி வெங்கட் என எக்கச்சக்க துணை கதாபாத்திரங்கள் இருந்தும் கதையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

திபு நினன் தாமஸின் இசையில் ‘எம்மாடி…எம்மாடி…’ பாடல் வைப் மெட்டிரியல். பின்னணி இசையும் படத்திற்குப் பலம் சேர்க்க முயல்கிறது. எம்.எஸ். பிரபு, ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவு கூட்டணி கடலின் பிரமாண்ட காட்சிகளை யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறது. காட்சி கோர்வையைப் பொறுத்தவரையில் சான் லோகேஷின் படத்தொகுப்பு நன்றாக இருந்தாலும், நேர்த்தியாகக் கதைசொல்லும் விதத்தில் கத்தரிக்க வேண்டிய காட்சிகள் ஏராளம். ஸ்டன்ட் சில்வா, ராஜசேகர் ஆகியோர் ஸ்டன்ட் காட்சிகளில் கொடுக்கப்பட்ட இடத்திற்குள் சிறப்பான வித்தைகளை இறக்கியிருக்கிறார்கள். ராட்சச குழாய்கள், குடிசைக்கு நடுவே குரூட் ஆயில் எடுக்கும் லேப், கேன், குடிசைகள் எனக் கலை இயக்கத்தில் ஸ்கோர் செய்திருக்கிறது ‘ஸ்கேர்க்ரோ’ குழு.

டீசல் படத்தில்…

வண்டியில் ஃபுல் டேங்க் ‘டீசல்’ நிரப்பி ஸ்டார்ட் செய்தது போல வெற்றிமாறன் குரலில் ஆரம்பிக்கிறது படம். அதில் முதலாளித்துவத்தின் சுரண்டல், பூர்வகுடி மீனவர்கள் வெளியேற்றம், நில அபகரிப்பு, குற்றவாளிகள் உருவாக்கப்படும் விதம் எனக் காத்திரமான அரசியலோடு ‘கச்சா எண்ணெய் மாஃபியா’ உலகம் பெரும் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. ஆனால் அவை வசனங்களாக மட்டுமில்லாமல் காட்சி மொழியிலும் விவரிக்கப்பட்டிருந்தால் இன்னும் கூடுதலாகப் பிரமிக்க வைத்திருக்கும். ஆனாலும் அதனுடன் தற்கால பிரச்னைகளை நுழைத்த விதம் சிறப்பு! ஆனால் இன்னொரு மாஃபியா தலைவன், அவனுக்கும் இவர்களுக்கும் போட்டி, வழக்கமான போலீஸ் வில்லன் ஆகிய கதாபாத்திரங்கள் கதையில் சேர, நன்றாகப் போய்க் கொண்டிருந்த வண்டியில் ‘பாதி’ டீசல் காணாமல் போன உணர்வு!

இதற்கு நடுவே வருகிற காதல் காட்சி, திரைக்கதையை இன்னும் பின்னோக்கி இழுக்கிறது. குறிப்பாக சென்டிமென்ட்டாக வைக்கப்பட்ட ‘கடல் கன்னி’ காட்சிகள் எல்லாம் ‘சிரிக்குறாங்கப்பா எல்லாரும்’ ரகம். இரண்டாம் பாதி முழுக்க முழுக்க ஏற்கெனவே பார்த்துப் பழகிய படங்களின் பாதிப்புகள் இருப்பதெல்லாம் வலிமையில் திரைக்கதைக்கான சான்றுகள்! கமெர்ஷியல் படத்திற்கான மீட்டரிலும் இல்லாமல், ஓர் அரசியல் படத்திற்கான மீட்டரிலும் இல்லாமல் ‘டீசல்’ தீர்ந்து போய் நடுக் கடலில் நிற்கும் படகாகிப் போகிறது திரைக்கதை. இயக்குநரின் நல்ல எண்ணங்களுக்கு மட்டுமே பாராட்டுகள்!

டீசல் படத்தில்…

சிறப்பான கதைக்கரு கொண்ட படம், அதை நல்லதொரு திரைமொழியில் கொடுக்கத் தவறியதால், ஓடாத வண்டிக்கு ஊற்றப்பட்ட ‘டீசல்’லாக வீணடிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.