Test Twenty என்பது என்ன? – கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய ஃபார்மட்!

கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகள், டி 20 தவிர டெஸ்ட் ட்வென்டி என்ற புதிய ஃபார்மட் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

கடந்த அக்டோபர் 16, வியாழக்கிழமை இந்த நான்காவது முறையை வெளிப்படுத்தியுள்ளார் ஒன் ஒன் சிக்ஸ் நெட்வொர்க்கின் (இங்கிலாந்தில் உள்ள தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிறுவனம்) நிர்வாகத் தலைவரும் விளையாட்டு தொழில்முனைவோருமான கௌரவ் பஹிர்வானி.

டிவில்லியர்ஸ்

கிரிக்கெட்டில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் வேண்டுமென்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் போன்ற புதிய விதிகளை முயன்றுள்ளனர்.

அதேப்போல டெஸ்ட் போட்டியின் தந்திர முக்கியத்துவத்தையும் டி 20யின் அதிரடியையும் ஒன்று சேர்க்கும் முயற்சியாக இந்த டெஸ்ட் 20ஐ உருவாக்கியிருக்கின்றனர். இதனை வடிவமைக்கும் குழுவில் ஹர்பஜன் சிங், ஏபி டிவில்லியர்ஸ், சர் கிளைவ் லாயிட் மற்றும் மேத்யூ ஹேடன் போன்ற மூத்த சர்வதேச வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல லெஜண்ட்கள் ஆதரவளித்துள்ளனர்.

ஹர்பஜன் சிங்

Test Twenty என்பது என்ன?

இதில் டெஸ்ட் போட்டிபோலவே ஒவ்வொரு அணியும் இரண்டு இன்னிங்ஸ்கள் விளையாட வேண்டும். ஆனால் ஒரு இன்னிங்ஸுக்கு 20 ஓவர்கள் மட்டுமே. நாள் முழுவதும் 4 இடைவெளிகளுடன் வீரர்கள் பங்கேற்பர். ஒரே நாளில் டெஸ்ட் கிரிக்கெட் பார்க்கும் அனுபவத்தை வழங்க முயலும் அமைப்பாகும். எப்போதும்போல போட்டி வெற்றி, தோல்வி அல்லது டிராவில் முடிவடையும்.

லெஜண்ட்ஸ் சொன்னதென்ன?

இது பாரம்பரிய கிரிக்கெட்டை கௌரவிப்பதுடன், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார் ஏபி டிவில்லியர்ஸ்.

இது விளையாட்டின் கலையையும் தாளத்தையும் மீட்டுருவாக்கம் செய்யும் அதே வேளையில் நவீன உற்சாகத்தைக் கொண்டிருக்கிறது என சர் கிளைவ் லாயிட் கூறியுள்ளார்.

“கிரிக்கெட்டுக்கு புதிய இதயத்துடிப்பு தேவை – இன்றைய இளைஞர்களை விளையாட்டின் அசல் உணர்வோடு இணைக்கும் ஒன்று. டெஸ்ட் 20 அதைத்தான் செய்கிறது.” எனக் கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.