ஐதராபாத்,
தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ரேவந்த் ரெட்டி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், மறைந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியை நினைவு கூறும் வகையில் யாத்திரை நிகச்சி ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ரேவந்த் ரெட்டியும் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ரேவந்த் ரெட்டி கூறுகையில், நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் நாட்டில் வாக்களிக்கும் குறைந்தபட்ச வயது வரம்பை 21ல் இருந்து 18 ஆக அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி குறைத்தார். 21 வயதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றும்போது ஏன் ஒருவர் 21 வயதில் எம்.எல்.ஏ. ஆகக்கூடாது? வரும் நாட்களில் தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச வயது வரம்பை 25ல் இருந்து 21 ஆக குறைக்க மசோதா நிறைவேற்றப்படும். நாட்டை வழிநடத்த இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்’ என்றார்.