IPL 2025ல் எதிர்பாராத தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ், அடுத்த சீசனுக்காக அணியை ஒட்டுமொத்தமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக பிளே ஆஃப்ஸில் இடம் பெறாமல் தவறியதால், சிஎஸ்கே அணியின் ஆட்ட திட்டத்திலும், வீரர் தேர்விலும் பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், தன்னை அணியில் இருந்து விடுவிக்க ராஜஸ்தான் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் சிஎஸ்கே-க்கு அவரை சேர்த்துக்கொள்ளும் சாத்தியம் அதிகரித்துள்ளது.
Add Zee News as a Preferred Source
சில மாதங்களுக்கு முன்பு, ‘க்ரிக் பஸ்’ செய்தியில் சிஎஸ்கே சாம்சனை வரவேற்க தயாராக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இதற்காக சென்னை அணி ராஜஸ்தான் அணிக்கு தேவையான வீரரை கொடுத்தால் மட்டுமே பரிமாற்ற ஒப்பந்தம் சாத்தியமாகும். 2021ல் ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை அணிக்கு தந்தது போல, இந்த முறை சஞ்சு சாம்சனின் மாற்றமும் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தோனி 2026 சீசனிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், அவர் ஓய்வுக்கு சென்ற பின் அணிக்கு கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் சாம்சன் சிறந்த மாற்றாக கருதப்படுகிறார்.
விடுவிக்கப்படும் 4 இந்திய வீரர்கள்
IPL 2026 மினி ஏலத்திற்கு முன், சென்னை அணியில் இருந்து நான்கு இந்திய வீரர்கள் நீக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அதில் முதலில் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டுள்ளார். அவர் ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளதால் நீக்கப்பட்டுள்ளார். அஷ்வின் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் ‘பிக் பாஷ் லீக்’வில் பங்கேற்கவுள்ளார். அவருடன் ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா மற்றும் விஜய் சங்கர் ஆகியோரும் விடுவிக்கப்பட உள்ளனர். கடந்த சீசனில் இவர்களின் செயல்திறன் எதிர்பார்த்த அளவிற்கு அமையாததால், சிஎஸ்கே மிடில் ஆர்டரை முழுமையாக மாற்ற முயற்சித்து வருகிறது.
டெவன் காண்வே?
2023ல் சென்னை அணிக்காக சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்கை வகித்த டெவன் காண்வே, கடந்த இரண்டு சீசன்களில் அதே ஃபார்மை காட்ட முடியவில்லை. ரூ.6.25 கோடிய்க்கு மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும், சிஎஸ்கே அவரை வெளிநாட்டு வீரர்களின் பட்டியலில் இருந்து விடுவிக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், குறைந்த ஒப்பந்த தொகையில் மீண்டும் அவரை அணிக்குள் கொண்டுவரும் வாய்ப்பும் பரிசீலனையில் உள்ளது.
சிஎஸ்கே, அடுத்த பத்தாண்டுகளுக்கான புதிய அணிக்கட்டமைப்பை தற்போது தொடங்கியுள்ளது. மகேந்திர சிங் தோனி, ஜடேஜா போன்ற மூத்த வீரர்களின் காலம் மெதுவாக முடிவடைகிறது. இதனால் அணியை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க தேவையான திறமைமிக்க வீரர்களை கண்டுபிடிக்க சிஎஸ்கே செயல்பட்டு வருகிறது. சஞ்சு சாம்சனின் வருகை, சிஎஸ்கே ரசிகர்களுக்கு தோனியின் மரபை தொடர்ந்து புதிய நம்பிக்கையையும், புதுப்பெருக்கத்தையும் அளிக்கும் என்று நம்பப்படுகிறது. IPL 2026 ஏலத்தில் சிஎஸ்கே எடுக்கும் சில முக்கிய முடிவுகள், அடுத்த தலைமுறை அணியின் திசையையே தீர்மானிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
About the Author
RK Spark