குடும்பத்துக்கு ஒருவர் இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிடுவதையெல்லாம் ஓவர்டேக் செய்து, குடும்பமே சேர்ந்து டான்ஸ், காமெடி ரீல்ஸ்களால் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருப்பவர்கள்தான் தாய் ஜேசுரதி, மகள் பிரக்யா, மகன் பிரகன், மருமகள் சினேகா உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஜேசுரதி குடும்பத்தார்’.
அதுவும், திடீரென ‘விக்ரமன்’ பட சென்டிமென்ட்களையே ஓரங்கட்டிவிட்டு ‘எங்கள் வீட்டில் எல்லாம் நாளும் கார்த்திகை…’ ரேஞ்சுக்கு பாச முத்தமழையைப் பொழிவார்கள்.

இந்த இன்ஸ்டா குடும்பத்திலிருந்து சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார், ஜேசுரதி மகன் பிரகன். இன்ஸ்டாவில் 8 லட்சம் ஃபாலோவர்ஸைக் கொண்ட பிரகனின் டான்ஸ் வீடியோக்கள் செம வைப்.
இவரது மனைவி சினேகாவின் ரீல்ஸ்களுக்கும் ரசிகர் கூட்டம் உண்டு. இந்தக் குடும்பத்திலிருந்து, முதல் ஆளாக சினிமாவில் என்ட்ரியாகியுள்ள பிரகனிடம் பேசினோம்.
“சினிமாவில் என்னோட ஃபேவரைட், இன்ஸ்பிரேஷன் விஜய் சார்தான். அவரோட ஆக்டிங், டான்ஸ், காமெடி சென்ஸ் எல்லாமே பார்த்து பிரமிச்சிருக்கேன். அதைப் பார்த்துதான் டான்ஸ், நடிப்பு மேல் இன்ட்ரஸ்ட் வந்துச்சு.
காலேஜில் பி.எஸ்.சி. பிசிக்ஸ் படிச்சிக்கிட்டிருக்கும்போது, டிக்டாக்ல நிறைய வீடியோக்கள் போடுவேன். அதுக்கெல்லாம், நல்ல ரீச் கிடைச்சது. அதுக்கப்புறம், டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டோம். எங்கம்மா ஜேசுரதி, தங்கச்சி பிரக்யா உங்களுக்கெல்லாம் தெரியும்.

அம்மா டீச்சரா ஒர்க் பண்றதால என்னோட படிப்பு, கரியர் விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்க. ஆனா, எனக்கு நடிப்பு மேலதான் இன்ட்ரஸ்ட். அதனாலதான், எப்பவும் டிக்டாக், டப்ஸ்மாஷ், ரீல்ஸ்னு இருந்தேன்.
2019-ஆம் ஆண்டு, நண்பர்களின் உதவியோடு ’தமயன்’ குறும்படத்தில் நடிச்சேன். இப்போ, விஜய் டிவி சித்து தயாரிப்பில் ’தி டார்க் ஹெவன்’ படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறேன்” என்பவரிடம் அவரது அம்மா, தங்கை குறித்து கேட்டோம்.
”எல்லா குடும்பத்திலேயுமே பிரச்னை இருக்கத்தான் செய்யுது. என்னோட வளர்ச்சியில் மட்டுமே இப்போ கவனம் செலுத்த விரும்புறேன். என் குடும்பத்தில் இருக்கிறவங்களே என்னைப் புரிஞ்சுக்காதப்போ, என் மனைவி சினேகாதான் என்னை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு போறாங்க.
’வருத்தப்படாதே, நான் இருக்கேன். உடம்பை ஃபிட்டா வெச்சுக்கோ, விமர்சனங்களைக் காதில் வாங்கிக்காத’ன்னு ரொம்ப கேரிங்கா பார்த்துக்கிறாங்க. ரொம்ப அன்பான மனைவி. சினேகா கடவுள் கொடுத்த கிஃப்ட்ன்னுதான் சொல்லணும்.
இப்போ, லேப் டெக்னீஷியனா ஒர்க் பண்ணிக்கிட்டிருக்காங்க. ஃப்ரீ டைமில் அவங்களும் என்கூட ரீல்ஸ் பண்ணுவாங்க. அவங்களுக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கு.

எனக்கு 8 லட்சம் ஃபாலோவர்ஸும், மனைவிக்கு 2 லட்சம் ஃபாலோவர்ஸும் இருக்காங்க. லவ் பண்ணும்போது காதலிச்சதைவிட இப்போ இன்னும் காதல் அதிகரிச்சிருக்கு.
எங்களைப் பற்றி நிறைய விமர்சனங்கள் வருது. அதைப் பற்றி கவலைப்படுவது கிடையாது. இதெல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள் செய்யும் வேலை. ஆரம்பத்தில் ஏன் இப்படி விமர்சனம் பண்றாங்கன்னு கவலையா இருந்தது.
ஆனா, இப்போல்லாம் அதைப் பற்றி யோசிப்பதே கிடையாது. என் முழு கவனம் எல்லாம் மக்களை சந்தோஷப்படுத்த ஃபேமிலி எண்டர்டெய்ன்மென்ட், ஃபேமிலி ஃபீல் குட் வீடியோக்கள் பண்ணணும்.
சொந்தமா தொழில் தொடங்குவதோடு, சினிமாவில் சாதிக்கணும். அதுதான் என் கனவு, லட்சியம் எல்லாமே!” என்கிறார் உறுதியாக.