சாத்தூர்: சாத்தூர் அருகே வைப்பாறு தரைப்பாலம் உடைந்து முற்றிலுமாக சேதமடைந்ததால் பாலத்தை உடனடியாக சரி செய்யக்கோரி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தூர் அருகே உள்ள இரவார்பட்டி- அச்சங்குளம் இடையே வைப்பாறு ஓடுகிறது. இவ்விரு கிராமங்களையும் இணைக்கும் வகையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வைப்பாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டது. இப்பாலம் திறக்கப்பட்ட 3 மாதங்களில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு பகுதி சேதம் அடைந்தது. அப்போது முதல் தற்போது வரை பாலம் சீரமைக்கப்படவில்லை.
இந்த தரைப் பாலம் வழியாகவே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள 126 குடும்ப அட்டைதாரர்களும் ஆற்றை கடந்து சென்று இரவார்பட்டியில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர். ஆனால், ஆண்டுதோறும் வெம்பக்கோட்டை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்போதெல்லாம் இந்த தரைப்பாலத்தை கடக்க முடியாமலும், அவசரத் தேவைக்காக சென்று வர முடியாமலும் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
ஆற்றில் சற்று தண்ணீர் குறைந்தால் தரைப்பாலம் வழியாக கிராம மக்கள் சற்று ஆபத்தான நிலையில் நடந்தே ஆற்றைக் கடந்து சென்று வருகின்றனர். தண்ணீர் அதிகமாகச் செல்லும் போதெல்லாம் அச்சன்குளம் கிராமத்தினர் சாத்தூர் அல்லது வெம்பக்கோட்டை வழியாக 25 கி.மீட்டர் சுற்றிச் சென்று இரு பேருந்துகள் ஏறிச்சென்று இரவார்பட்டியில் உள்ள ரேசன் கடைக்குச் சென்று வருகின்றனர். அண்மையில் பெய்த தொடர் மழையால் அணைகள் நிரம்பியுள்ளதால் தற்போதும் வைப்பாறில் தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்கிறது.
உடைந்த தரைப் பாலத்தை சரி செய்து கொடுக்குமாறு பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனுக்கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதைக் கண்டித்து அச்சங்குளம் பகுதி பொதுமக்கள் உடைந்த தரைப் பாலத்தில் அமர்ந்தும், வைப்பாற்றில் இறங்கியும் இன்று போராட்டத் தில் ஈடுபட்டனர்.