ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் பலாமூ மாவட்டம் மதினிநகர் கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 14 வயதில் மகள் இருந்தார். இந்நிலையில், அந்த சிறுமி கடந்த 16ம் தேதி இரவு அதேகிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்க செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
ஆனால், சிறுமி உறவினர் வீட்டிற்கு செல்லவில்லை. மறுநாள் காலை சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது, இரவு சிறுமி தங்கள் வீட்டிற்கு வரவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அனைவரும் சிறுமியை தேடியுள்ளனர்.
அப்போது, கிராமத்திற்கு அருகே உள்ள குளத்தில் சிறுமி சடலமாக கிடப்பதை உறவினர்கள் கண்டுபிடித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் அதே கிராமத்தை சேர்ந்த அருண் குமார் (வயது 21) என்ற இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சம்பவத்தன்று சிறுமி தனது உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, அவரை பின் தொடர்ந்து சென்ற அருண் குமார் , சிறுமியை கிராமத்திற்கு வெளியே ஆள் நடமாட்டமற்ற பகுதிக்கு கடத்தி சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர், பாலியல் வன்கொடுமை குறித்து யாரிடமாகவது சிறுமி கூறிவிடுவார் என எண்ணிய அருண் குமார், சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். பின்னர், சிறுமியின் உடலை கிராமத்திற்கு அருகே உள்ள குளத்தில் வீசிவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இதையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு கொன்று உடலை குளத்திற்குள் வீசிய அருணை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.