பைசன்: "இன்பன் உதயநிதியை வைத்து படம் இயக்க உள்ளீர்களா?" – மாரி செல்வராஜ் அளித்த பதில் என்ன?

தீபாவளியை முன்னிட்டு வெளியான பைசன் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர்கள் அமீர், ரஜீஷா விஜயன் மற்றும் இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் சேலம் பேர்லைன்ஸ் பகுதியில் உள்ள திரையரங்கில் ரசிகர்களைக் காண வந்தனர்.

அப்போது, தீக்கொழுத்தி பாடல் பாடி ரசிகர்களைக் கவர்ந்தார் இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா. தொடர்ந்து திரைப்படக் குழுவினருடன் ரசிகர்கள் ஒருவரையொருவர் முந்தியடித்து கொண்டு செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

பைசன் படக்குழு ரசிகர்கள் சந்திப்பு
பைசன் படக்குழு ரசிகர்கள் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் மாரி செல்வராஜ், “பைசன் படத்தை மக்கள் முழு மனதோடு கொண்டாடுகிறார்கள். திரையரங்குகள் நிரம்பி வழிகின்றன. மாமன்னன் படத்தை சேலத்தில்தான் எடுத்தேன். ஆதரவு தந்த மக்களுக்கு படக்குழு சார்பில் நன்றி. அடுத்த படம் தனுஷை வைத்து வரலாற்று படமாக இயக்குகிறேன். பெரிய பட்ஜெட்டில் பெரிய படமாக இருக்கும்.

கடந்த காலத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது தற்போது இளைஞர்களுக்குப் பல சிக்கல்கள் உள்ளன. அதை உடைக்கும் வகையில்தான் பைசன் எடுக்கப்பட்டது. இந்த மாதிரி படங்களை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள் என்றால் மாற்றத்திற்கு மக்கள் தயாராக உள்ளனர் என்றுதான் அர்த்தம்.

மேலும், ரஜினி, எனது அனைத்து படத்திற்கும் அவற்றின் படக்குழுவிற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினியுடன் பல உரையாடல்கள் நடத்தி உள்ளேன். ரஜினியை வைத்து இயக்க வாய்ப்பு கிடைத்தால் அது நிச்சயம் அவருக்கு ஏற்ற மிகப்பெரிய படமாகத்தான் இருக்கும்” என்று பேசினார்.

பைசன் படக்குழு
பைசன் படக்குழு

இன்பநிதியை வைத்து படம் இயக்குவதாக வந்த தகவல் குறித்த கேள்விக்கு, “அது இன்னும் முடிவாகவில்லை. மாமன்னன் படத்தின் போது ரெட் ஜெயண்ட் உடன் மேலும் ஒரு படம் இயக்க ஒப்பந்தம் செய்தேன். அதில் கதாநாயகன், கதாநாயகி குறித்து இன்னும் முடிவாகவில்லை. கதை அமைந்த உடன் அதற்கான வேலை தொடங்கும்” என்றார்.

தொடர்ந்து அரசியல் சார்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருவது குறித்து நடிகர் அமீர் கூறுகையில், “தமிழ்நாட்டில் அரசியலில் சினிமா இல்லாமல் இல்லை. தமிழ்நாட்டில் அரசியலுக்கும் சினிமாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தற்போது கூட சினிமாவில் இருந்து வந்தவர்தான் முதல்வர் வேட்பாளராக விவாதித்து வருகிறார்கள். மாரியின் அரசியல் சினிமாவில்தான். நான் சினிமாவில் பெரிதும் அரசியல் பேசமாட்டேன்.

வடசென்னை 2 படத்தில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்பதை வெற்றிமாறன்தான் முடிவு செய்வார். வெற்றிமாறன் அழைத்தால் நிச்சயம் நடிப்பேன். இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவை அன்டர்ரேட்டடு என்பதை எதிர்க்கிறேன். தற்போதைய சூப்பர் ஸ்டாராக இருப்பவர்களுக்குக் கூட முதல் படத்தில் அங்கீகாரம் கிடைக்கவில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.