BB Tamil 9 Day 16: `ஏதாச்சும் பண்ணுங்க பாஸ்' – பாரு, வியன்னாவின் போர்கொடி

வீடு பெருக்கும் ஒரு சிறிய வேலையைக்கூட செய்யாமல் முரண்டு பிடித்து அதற்காக ஒரு மணி நேரம் சண்டை போடுவது ஒவ்வொரு சீசனிலும் நடக்கிறது. இந்த எபிசோடை அதன் உச்சம் எனலாம். 

இது பிக் பாஸ் வீடுகளில் மட்டுமல்ல. ஏறத்தாழ பெரும்பான்மையோரின் வீடுகளில் பார்க்கலாம். பெற்றோர்க்கு ஒரு சிறிய உதவியைக் கூட செய்யாமல் முரண்டு பிடித்து செல்போனில் மூழ்கியிருக்கும் பிள்ளைகள் பலர். 

BB Tamil 9 Day 16
BB TAMIL 9: DAY 16

“காலங்காத்தால சிங்கிள் டீ கூட தர மாட்டீங்களா.. வெறும் வயத்துல என்னால வேலை செய்ய முடியாது” என்று எபிசோடின் ஆரம்பத்திலேயே வேலை நிறுத்தம் செய்தார் பாரு.  சூப்பர் வீட்டின் சொகுசை அனுபவித்து விட்டு திரும்பியிருப்பவருக்கு வேலை செய்வது கொடுமையாகத் தெரிகிறது. “நாங்க இத்தனை நாளா அப்படித்தான் செஞ்சுட்டு வரோம். இப்பவாவது எங்க வலி புரியுதா?” என்று பிக் பாஸ் வீடு சொல்ல கலவரம் ஆரம்பம். 

‘ஏண்டா கேப்டன் ஆனோம்?’ என்று ஆரம்ப நாளிலேயே கனியை பாடாயப்படுத்தி விட்டார்கள். ஆனால் துஷார் போல் சும்மா நிற்காமல், சாம, பேத, தான, தண்டம் ஆகிய வழிமுறைகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு சிக்கலையும் சமாளித்தார் கனி.

பாரு முரண்டு பிடித்ததைப் பார்த்து வியன்னாவும் அதை நகலெடுக்க ஆரம்பித்து “என்னால இது முடியாது” என்று வேலை செய்ய மறுக்க எஃப்ஜேவிற்கு கோபம் வந்தது. கூடவே சண்டையும் வந்தது. “ரூல்ஸ் பிரேக் பண்ணா கூட பிரச்சினையில்லை. என்னால முடியாது” என்று மல்லுக்கட்டினார் வியன்னா. விசாரணை நாளில் கொஞ்சிப் கொஞ்சிப் பேசி சமாளித்து விடலாம் என்கிற நம்பிக்கையோ, என்னமோ!

பாருவைக் கட்டுப்படுத்த முடியாத கனி, வியன்னாவை ‘தங்கம்ல.. ஒரு சின்ன தண்டனை செஞ்சுடும்மா” என்று கொஞ்சி தோப்புக்கரணம் போட வைத்தார். “எனக்கு ரெண்டு கை, கால்தான் இருக்கு” என்று பத்து முறைக்கும் மேலாக சொல்லி கத்திக் கொண்டிருந்தார் வியன்னா. 

“பிக் பாஸ் வீடு ஏற்கெனவே பண்ணினதைத்தானே நீங்க இப்ப பண்றீங்க. அதுல என்ன பிரச்சினை?” என்று கனி லாஜிக்கலாக சொல்லியும் வியன்னாவை சமாளிக்க முடியவில்லை. “வேலை வாங்கற விதம்ன்னு ஒண்ணு இருக்கு” என்று வேலை செய்ய மறுத்தார். 

BB Tamil 9 Day 16
BB TAMIL 9: DAY 16

கதை சொல்லும் நேரம். பார்வதியை ‘பாரு’ என்று செல்லமாக கூப்பிட்டால் அவருக்குப் பிடிக்குமாம். ‘என்னைப் பாரு.. இங்க பாரு’ என்று பொழுது பூராவும் அட்டென்ஷன் சீக்கிங்காக இருப்பதால் ‘பாரு’ என்பது அவருக்குப் பொருத்தமான பெயர்தான். 

“நான் அக்மார்க் பொண்ணு. அம்மாவுக்கு வயசான காலத்துல பொறந்தேன். மத்தவங்க அம்மாக்கள் இளமையா இருக்க, என் அம்மா வயசானவங்களா இருக்கறாங்களேன்னு சின்ன வயசுல வருத்தப்பட்டிருக்கேன். ஆனா அப்புறம்தான் அவங்க அருமை புரிஞ்சது. புத்திசாலியான பெண்மணி.

கெத்தா இருந்தா எங்க அப்பா, என்னோட சின்ன வயசுலேயே இறந்துட்டாரு. அப்பாவோட அன்பு கிடைக்காததால, காதல்ன்ற பெயர்ல வந்த அன்புகளை பார்க்க ஆரம்பிச்சேன்..  ஆண் மட்டும்தான் பேச முடியும்ன்ற விஷயங்களைக் கூட நான் பேச ஆரம்பிச்சேன்.” என்று தன் பின்னணியை விவரித்து விட்டு “இந்த வீட்டில் சின்னப்புள்ளத்தனமா ஏதாவது செஞ்சிருந்தா மன்னிச்சிடுங்க” என்று பொத்தாம் பொதுவாக ஜாமீன் வாங்கி தன் பேச்சை முடித்தார் பாரு. 

BB Tamil 9 Day 16
BB TAMIL 9: DAY 16

அடுத்ததாக பிரவீன்ராஜ் கதை. “தெரு முழுக்க பட்டாசா வெடிக்கற அளவிற்கு வசதியா இருந்த வீடு, சீட்டுக் கட்டற பணப் பிரச்சினையால அடுத்த வருஷமே தலைகீழா மாறிடுச்சு. கீழ இருந்து பொறுக்கி பட்டாசு வெடிக்கற அளவிற்கு நிலைமை. விஜய் டிவி ஸ்டார் போட்டில செலக்ட் ஆனதுல தலைகால் புரியல. என் வாழ்க்கையில் நான் கத்துக்கிட்ட பாடம் ‘நம்மை நம்பியிருப்பவர்களை சந்தேகப்படக்கூடாது’. 

“…அந்த அளவுக்கு சந்தேக மிருகமா இருந்து என் வொய்ஃபை ரொம்ப டார்ச்சர் பண்ணேன். ஆனா ஒரு கட்டத்துக்கு மேலதான் அவங்க அன்பு எனக்கு புரிஞ்சது. என்னை உருவாக்கினதே அவங்கதான்” என்று உணர்வுப்பூர்வமாக பேசி முடித்தார் பிரவீன். 

பாருவின் அலப்பறை மீண்டும் ஆரம்பித்தது. “என்னால குப்பையெல்லாம் எடுக்க முடியாது. நீங்கதான் பொறுக்கி கவர்ல போட்டு கொடுக்கணும்..அப்படித்தானே வெளிலயும் பண்ணுவோம்” என ரகளையைக் கூட்டினார் பாரு. இதுதொடர்பாக ஆதிரைக்கும் பாருவிற்கும் சண்டை. “பிக் பாஸ் வீட்டுக்காரங்க இதையெல்லாம் பண்ணிட்டுதான் இருக்காங்க” என்று மல்லுக்கட்டிப் பார்த்த கனி, ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, விக்ரம் தந்த யோசனைப்படி “நீங்க எந்த வேலையும் செய்ய வேண்டாம். சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குங்க. போதும்” என்று அஹிம்சை முறையில் இதைக் கையாள முயற்சித்தார். 

BB Tamil 9 Day 16
BB TAMIL 9: DAY 16

“நீங்க பிக் பாஸ் வீட்ல முன்ன இருந்தப்பவும் வேலை செய்ய மாட்டேன்னு ரிசைன் பண்ணிட்டு போயிட்டிங்க.. இப்பவும் இதே மாதிரி பண்றீங்க’ என்று சரியான பாயின்ட்டை பிடித்தார் ரம்யா. “ஏண்டா.. இவங்களை வீடுதானே பெருக்கச் சொன்னோம். கிரியேட்டிவிட்டியா கூட எதையும் பண்ணச் சொல்லலயே.. இதுக்கே கருத்து கருமம்லாம் பேசறாங்க” என்று ஓரமாக நின்று பாருவை கிண்டலடித்துக் கொண்டிருந்தார் விக்ரம். 

“சூப்பர் வீ்ட்ல இருக்கறவங்களுக்கு பசிக்கறப்ப ‘நீங்க சமைங்க’ன்னு சொன்னா, அது ரூல்ஸ் பிரேக்ன்னு சொன்னாங்கள்ல.. அப்படின்னா. நாங்க மட்டும் ஏன் குப்பையை எடுத்து கவர்ல போடணும்.. அதுவும் ரூல்ஸ் பிரேக்தானே?” என்று சட்ட வல்லுநர் போல பாயின்ட்டைப் பிடித்தார் எஃப்ஜே. அந்த அறையில் இருக்கும் இத்தூண்டு குப்பையை எடுத்துப் போடுவதற்காக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்தச் சண்டை நீடித்துக் கொண்டேயிருந்தது.

எங்கிருந்தோ கிளவுஸை கொண்டு வந்து கனி கொடுக்க “பத்தியா.. இது எங்க இருந்துச்சு.. இப்ப வேலை செய்வேன்” என்று ஹைஜீனிக் மோடில் தன் ஸ்ட்ரைக்கை முடித்துக் கொண்டார் பாரு. “நான் நெறய வேலை செஞ்சுட்டேன். என்னால இனிமே முடியாது” என்று வியன்னா வியர்வையை உதற, “சூப்பர் வீட்ல இருந்த போது நிறைய சாப்பிடும் போது தெரியலையா?” என்று எஃப்ஜே வெறுப்பேற்ற “என்னடி இது பச்சை சட்டைக்காரன் இப்படி கேவலமா இருக்கான்” என்று பாருவிடம் சலித்துக் கொண்டார் வியன்னா. “சாப்பாட்டை வெச்சு அரசியல் செய்றாங்க ப்ரோ” என்று பின்பாட்டு பாடினார் பாரு. 

BB Tamil 9 Day 16
BB TAMIL 9: DAY 16

வீக்லி டாஸ்க். என்னத்தைச் சொல்ல? துளிகூட சுவாரசியம் இல்லாத இதையெல்லாம் எப்படித்தான் யோசிக்கறாங்களோ?

ஜூஸ் ஃபேக்டரி மாதிரி ஒரு செட்டப். சூப்பர் வீட்டில் இருப்பவர்கள் இதன் உரிமையாளர்கள். பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பாட்டில் சப்ளையர்கள். இவர்கள் பாட்டில்களைப் பொறுக்கி, கழுவி உரிமையாளர்களிடம் தர வேண்டுமாம். அவர்கள் அதில் ஜூஸ் நிரப்பி தரபரிசோதனை ஆட்களிடம் தர வேண்டும். எத்தனை பாட்டில்கள் அப்ரூவ் ஆகிறதோ அதற்கேற்ப பிக் பாஸ் காயின் கிடைக்கும். அதிக அளவில் காயின் பெறுகிறவர்களுக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். 

கோக்குமாக்காக இருந்த விதிகளில் ஒன்று. தங்களுக்கு கிடைக்கும் காயின்களை உரிமையாளர்களே வைத்துக் கொள்ளலாமாம். போனால் போகிறதென்று நினைத்தால் பாட்டில் சப்ளையர்களுக்கு தரலாமாம். (நல்லா வளர்க்கறாங்கய்யா…..சமத்துவம்!)

‘ஓட முடியாது.. ஒளிய முடியாது.. பேசத் தெரியாது.. ஆனா குறை மட்டும் நல்லா சொல்லத் தெரியும்’.. அப்படின்னு இருக்கற இரண்டு நபர்களை குவாலிட்டி கண்ட்ரோல் அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கலாம். ‘குறை மட்டும் சொல்லத் தெரியும்’ என்று சொன்ன மறுகணமே யாருடைய முகம் நினைவில் வந்திருக்கும்? யெஸ்.. பார்வதியையைத்தான் பெரும்பாலோனோர்கள் தேர்ந்தெடுத்தார்கள். “எனக்காடா பேசத் தெரியாது.. வேணுமின்னே பழி வாங்கறீங்களா.. இருங்கடா.. குவாலிட்டி கண்ட்ரோல்ல நீங்க எப்படி பாஸ் பண்றீங்கன்னு பார்க்கறேன்” என்று சபதம் ஏற்றுக் கொண்டார் பாரு. ‘ஓட முடியாது’ என்கிற காரணத்தினால் இன்னொரு நபராக திவாகர். ஜாடிக்கேற்ற மூடி. 

குறை சொல்லக்கூடிய நபராக வியன்னாவின் பெயரும் சில முறை வந்தது. இதற்காக மனம் புண்பட்டு ‘என்னை கார்னர் பண்றாங்க’ என்று அழுத வியன்னா, பிறகு மனம் தேற்றிக் கொண்டு “எவ்ளோ வேணா அடிங்கடா.. அதுக்கேத்த பவர் வந்துடுச்சு” என்று வடிவேலு காமெடி மாதிரி கெத்தாக நின்றார்.

BB Tamil 9 Day 16
BB TAMIL 9: DAY 16

டாஸ்க் ஆரம்பித்தது. பாட்டில்கள் வர கூட்டமாக போய் முட்டி மோதி எடுத்துக் கொண்டு வந்தார்கள். மெரீனா பீச் கடை போல வரிசையாக ஜூஸ் கடைகளை வைத்துக் கொண்டு “வாங்க.. வாங்க சார்.. பத்து ரூபாதான்..” என்று கத்திக் கொண்டிருந்தார்கள். ‘எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது’என்று விளம்பர டோனை மெயின்டெயின் செய்தார் சபரி. 

ஜூஸ் என்கிற பெயரில் என்னத்தையோ கலர் கலராக கலக்கிக் கொண்டு வந்து QC அதிகாரிகளிடம் கொண்டு வந்து தந்தார்கள். இதில் பாரு உஷாராக இருந்தார். ‘அண்ணே.. பாட்டில் வெளில நான் செக் பண்றேன். டேஸ்ட் மட்டும் நீ பாரு” என்று அந்தப் பொறுப்பை திவாகரிடம் தள்ளி விட்டார். ‘என்ன கருமத்த தண்ணிய கலந்தாங்களோ.. நாம எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்’ என்று திவாகரைப் பலியாடாக மாற்றிய பாரு புத்திசாலிதான். 

BB TAMIL 9: DAY 16

“நான் நாயா பொறக்க வேண்டியவன்” என்கிற தற்பெருமையுடன் ஒவ்வொரு பாட்டிலையும் முகர்ந்து சுவைத்துப்பார்த்தார் திவாகர். ஆனால் இதில் சீனியர் அதிகாரி பாருதான். திவாகர் எதையாவது சொல்ல “யோவ்.. இருய்யா.. அவசரப்பட்டு சொல்லிடாத. நான் செக் பண்ணணும். இவங்கள்லாம் ஒரண்டை இழுக்கறவங்க.. நாமதான் சூதானமா இருக்கணும்” என்று ஸ்ட்ரிக்ட் ஆபிசராக சொல்ல “ஆகட்டும் ஆபிஸர்” என்று விசுவாச ஊழியராகச் செயல்பட்டார் திவாகர்.

பத்து பாட்டில்கள் கொடுத்தாலும் ‘இது ரிஜக்ட்டட்’ என்று ஒன்றை மட்டுமே அப்ரூவ் செய்யும் கண்டிப்பான அதிகாரிகளாக இருந்தார்கள். இறுதியில் ஜூஸ் கடை முதலாளிகளுக்கு ஆளுக்கு ஒரு காயின் கிடைக்க “இது யாருக்கு தரப் போறீங்க?” என்று பிக் பாஸ் கேட்க “அஸ்க்கு.. புஸ்க்கு.. இதை நாங்களே வெச்சுக்கறோம்” என்று சொல்வதின் மூலம் அசல் முதலாளிகளாக சூப்பர் வீடு இருந்தது. 

இந்த ஜூஸ் கடை வியாபாரம் கொஞ்சமாவது பிக்அப் ஆகுமா..அல்லது இந்த சீசன் போல சுத்தமாக ஊத்திக் கொள்ளுமா என்பது பிறகுதான் தெரியும். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.