Virat Kohli : இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அடிலெய்டு மைதானத்தில் நடந்த 2வது ஒருநாள் போட்டியிலும் விராட் கோலி டக்அவுட்டானார். சுப்மன் கில் அவுட்டானதும் களத்துக்கு வந்த அவர், தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்பிடபள்யூ என்ற முறையில் அவுட்டானார். பெர்த் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் விராட் கோலி டக்அவுட்டாகியிருந்த நிலையில், இப்போட்டியிலும் டக்அவுட்டானார். இதன் மூலம் முதன்முறையாக ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த போட்டிகளில் விராட் கோலி டக்அவுட் ஆகியிருக்கிறார். அவர் அவுட் ஆனதும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும், விராட் கோலியை கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
Add Zee News as a Preferred Source
இதனைக் கவனித்த விராட் கோலி கிளவுஸ் மற்றும் பேட்டை தூக்கி அவர்களின் ஆதரவை ஏற்றுக் கொண்டார். அதேநேரத்தில் விராட் கோலியின் இந்த சைகை வேறொரு கோணத்திலும் பார்க்கப்படுகிறது. அதாவது, இதற்கு முன்னர் எல்லாம் அவுட் ஆனால் விராட் கோலி இப்படியான சிக்னல்கள் எதையும் கொடுக்கமாட்டார். ஆனால், இப்போது கொடுத்திருக்கிறார் என்றால், அவர் ஓய்வு பெறும் முடிவில் இருப்பதாலேயே இப்படி செய்திருக்கிறார் என்று கிரிக்கெட் நிபுணர்கள் உடனடியாக கமெண்ட் அடித்துள்ளனர்.
விராட் கோலி ஓய்வு ஏன்?
இந்திய அணியில் இப்போது ஒரே ஒரு பார்மேட்டில் மட்டும் விராட் கோலி, ரோகித் சர்மா விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் 2027 ஆம் ஆண்டு நடக்கும் ஒருநாள் போட்டி உலகக்கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம் என நினைக்கின்றனர். ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்களை முன்கூட்டியே ஓய்வு பெற்றாலும் பரவாயில்லை என நினைக்கிறது. காரணம், ஜெய்ஸ்வால், சாம்சன் போன்ற பிளேயர்கள் அவர்கள் இருவரின் இடத்தை பூர்த்தி செய்ய காத்திருக்கிறார்கள். அதனால், இரு சீனியர் பிளேயர்களும் இந்திய கிரிக்கெட்டுக்காக இவ்வளவு நாட்கள் கொடுத்த பங்களிப்பு போதுமானது என அணி நிர்வாகம் கருதுகிறது.
அஜித் அகர்கர் கூறிய கருத்து
இது குறித்து அண்மையில் பேசிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், 2027 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் விராட் கோலி, ரோகித் சர்மா விளையாடுவார்கள் என எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது என வெளிப்படையாக தெரிவித்துவிட்டார். அதற்கு இன்னும் நீண்ட காலம் இருப்பதால் அப்போது தான் முடிவெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். விராட், ரோகித் இந்திய கிரிக்கெட்டுக்கு பெரிய பங்களிப்பை அளித்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது என்றாலும் அணி தேர்வு விஷயத்தை பொறுத்தவரை அப்போதைய சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என தெரிவித்துவிட்டார்.
விராட், ரோகித் மீது நெருக்கடி
மேலும், ஆஸ்திரேலியா தொடரில் இருவரும் சிறப்பாக விளையாடினாலும், 2027 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக்கோப்பை அணிக்கான இடத்தை அவர்கள் உறுதி செய்துவிட்டார்கள் என்றும் உத்தரவாதம் இல்லை எனவும் அஜித் அகர்கர் கூறினார். இந்த சூழலில் பெர்த் போட்டியில் விராட், ரோகித் ஒற்றை இலக்க ரன்களில் விளையாடியது பெரும் விவாதமாக உருவான நிலையில், அடிலெய்டு போட்டியில் யார் மோசமாக விளையாடினாலும் அவர் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்பது விராட் மற்றும் ரோகித் சர்மா இருவரிடமும் தெரிவிக்கப்பட்டது. இந்த நெருக்கடியில் களமிறங்கிய விராட் கோலி மீண்டும் டக்அவுட்டானார். இதனாலேயே விராட் கோலி மீண்டும் அணியில் சேர்க்கப்படுவாரா? அல்லது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கப்போகிறாரா? என்ற கேள்விகள் பலமாக எழத் தொடங்கியுள்ளது.